மகர விளக்கு பூஜை: சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு

சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மண்டல பூஜை நடைபெற்றது. இதையடுத்து அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இதையடுத்து மறுநாள் 31-ந் தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் பகல் 11.30 மணிக்கு நெய்யபிஷேகம், 12.30 மணிக்கு உச்ச பூஜை போன்றவை நடைபெறும். பின்னர் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணி முதல் புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு அய்யப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடக்கும்.
முன்னதாக மகரவிளக்கையொட்டி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து 12-ந் தேதி ஊர்வலமாக புறப்படும். 11-ந் தேதி எருமேலியில் வலியபேட்டை துள்ளல் நடக்கிறது. மகரவிளக்கின் முன்னோடியாக 12, 13-ந் தேதிகளில் சன்னிதானத்தில் சுத்தி கிரியை பூஜைகள் நடைபெறும்.






