திருவண்ணாமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் காணப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருகிறது. கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
அந்த வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், அரையாண்டு விடுமுறை என்பதாலும், திருவண்ணாமலை கோவிலில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 6 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர். இதேபோல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்றவண்ணம் உள்ளனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோலில்களில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் அஷ்டலிங்க கோவில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் காஞ்சி சாலை கிரிவல பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்களின் வருகை அதிகரித்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






