ஜோதி ரூபமாக காட்சி கொடுத்த ஈசன்!
பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வந்த சிவலிங்கத்தில் இருந்து ஜோதி ரூபமாய் இறைவன் தன்னை வெளிப்படுத்தினார்.
திருச்சி திருவானைக்காவல் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கே 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழ கொண்டையம்பேட்டையில் உள்ளது ஜோதிர்லிங்கேஸ்வரர் ஆலயம்.
இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி உள்ளது. முகப்பைக் கடந்ததும் பெரிய மகாமண்டபமும், நடுவே பீடமும், நந்தியும் உள்ளன. வலது புறம் இறைவி ஜோதீஸ்வரியின் சன்னிதி இருக்கிறது. அன்னை நின்ற கோலத்தில் தென் முகம் நோக்கி அருள்பாலிக்கிறாள். மகாமண்டபத்தின் அடுத்துள்ள கருவறை எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இறைவன் ஜோதிர்லிங்கேஸ்வரர், லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் பீடம் வட்ட வடிவில் அமைந்துள்ளது.
லிங்கத்தை தேடி அலைந்த நிர்வாகிகள்
கீழ கொண்டையம்பேட்டையில் ஆலயம் அமைக்க முடிவு செய்த நிர்வாகத்தினர், பிரதிஷ்டை செய்ய ஒரு சிவலிங்கத்தை தேடி அலைந்தனர். எவ்வளவு முயன்றும் சிவலிங்கம் கிடைப்பதில் சிக்கல்களும், தடங்கல்களும் உருவாகிக் கொண்டே இருந்தன.
இந்த நிலையில் திருவானைக்காவல் அருகே உள்ள திருவளர்சோலை என்ற கிராமத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது என்றும், அது பூஜை ஏதும் செய்யப்படாமல் இருப்பதாகவும், அதற்குரியவர் அங்கு தினம் ஒரு வேளை விளக்கு மட்டும் ஏற்றி வருகிறார் என்றும் தகவல் கிடைத்தது. அதனைக் கேள்விபட்ட நிர்வாகிகள், அந்த இடத்திற்கு நேரில் சென்றனர்.
அங்கு ஈசனுக்கு ஒரு வேளை மட்டும் விளக்கேற்றி வருபவரிடம், தாங்கள் வந்த காரணத்தை விவரமாக எடுத்துரைத்தனர். மேலும் அவரிடம் சிவலிங்கத்தை தங்களுக்கு தர முடியுமா? என்று தயங்கியபடியே கேட்டனர். அப்போது அந்த நபர் அளித்த பதில், வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
அவர்கள் வருவது குறித்து முதல் நாள் கனவில் தனக்கு தெரியவந்ததாகவும், உங்களிடம் சிவலிங்கத்தை தரும்படி இறைவனால் பணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அதன்படியே அந்த சிவலிங்கத்தை வந்திருந்தவர்களிடம் ஒப்படைத்தார்.
இதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட நிர்வாகிகள், தாங்கள் அமைக்கும் கோவிலில் பிரதிஷ்டை செய்யும் இறைவனுக்கு திருநீற்றீஸ்வரர் என திருநாமம் சூட்ட எண்ணி இருந்தார்கள்.
ஜோதி ரூபமாக காட்சி
ஆனால், அவர்கள் சிவலிங்கத்தை பெற்றுக் கொண்டு தங்கள் ஊர் திரும்பும்போது, சிவலிங்கத்தில் இருந்து ஜோதி ரூபமாய் இறைவன் தன்னை வெளிப்படுத்தினார். எனவே இறைவனின் திருநாமமாக ஜோதிர்லிங்கேஸ்வரர் என்ற பெயரை சூட்டினர்.
கருவறையில் எண்கோண வடிவத்தில் ஐம்பொன்னும், நவக்கிரக கற்களும், சிதம்பர சக்கரமும் பதிக்கப்பட்டு அதன் மேல் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறையில் சென்று வழிபடும் பக்தர்களின் மன வெளிப்பாடும், மன அதிர்வுகளும் லிங்கத்திற்கு கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவசிதம்பர சக்கரத்தில் பட்டு எதிரொலித்து, ஜோதிர்லிங்கேஸ்வரர் ரூப இறைவனை அடையும்படி கருவறையின் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
எண்கோண வடிவம்
கருவறையின் தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு திசைகளில் இருக்கும் சுவர்களில் உள்ள சிறிய துவாரங்களில், ஏதேனும் ஒன்றில் நாம் 'ஓம்' என்று சொல்ல, அந்த ஓசை நான்கு புறமும் எதிரொலிக்கும்.
ஆலய கருவறையின் நான்கு புறமும் வாசல் உள்ளது. திருமூலர் தரிசனப்படி நடு ஈசான மூர்த்தி, கிழக்கு தத்புருஷ மூர்த்தி, தெற்கு அகோர மூர்த்தி, மேற்கு சத்யோஜாதமூர்த்தி, வடக்கு வாமதேவ மூர்த்தியாக நினைத்து வணங்கி வேண்டுபவர்களுக்கு வேண்டிய வண்ணம் வேண்டுவதை இறைவன் வழங்குகிறான் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஆலயத்தின் கோபுர கலசத்தை நாம் வெளியே இருந்து வணங்கினால், அது மூலவரை வணங்குவதற்குச் சமம். ஏனெனில் மூலவரான ஜோதிர்லிங்கத்திற்கு நேர் மேல் நேராக கலசம் வரை துவாரம் உள்ளது.
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ஜோதிர்லிங்கேஸ்வரர், பஞ்சமுக ஈஸ்வரனாகவும் அருள்பாலிக்கிறார். அதாவது நடு ரிஷபாரூட சோமாஸ்கந்தராகவும், கிழக்கு கால சம்ஹாரராகவும், தெற்கு தட்சிணாமூர்த்தியாகவும், மேற்கு உமாமகேஸ்வர அர்த்தநாரீஸ்வரராகவும், வடக்கு ஏக பாதராகவும் (நடராஜ மூர்த்தியாக) இருந்து அருள்பாலிக்கிறார்.
இந்த ஆலயத்தில் ஜீவன் அனைத்தும் சிவ சொரூபமே என்பதை கருத்தில் கொண்டு பக்தர்கள் யாவரும் மூலவரை தொட்டு வணங்கவும், ஆராதனை நேரங்களில் பக்தர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்யவும், போற்றி வணங்கவும் ஏற்ற வகையில் கோவில் நடைமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அன்னை ஜோதீஸ்வரி என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறாள்.
திருவிழாக்கள்
இறைவனின் கருவறை முகப்பில் இடது புறம் விநாயகரும், வலது புறம் முருகனும் அருள் பாலிக்கின்றனர். வடது புறம் வள்ளலாரின் தியான மண்டபம் உள்ளது. இந்த தியான மண்டபத்தில் தைப் பூசம் அன்றும், வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5-ம் தேதியும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஐப்பசி பவுர்ணமி அன்று மூலவர் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயன்பெறுகின்றனர்.
கார்த்திகை மாத சோமவாரங்களில் இறைவனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை திருநாள் அன்று ஜோதி ஏற்றும் திருவிழாவும், ஆவணி மாத பவுர்ணமி அன்று முக்கனி அபிஷேகமும், மார்கழி மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன் அபிஷேக, ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன. தைப்பூசத்தன்று நடக்கும் சிறப்பு ஆராதனைகளும் அன்னதானமும் வெகு சிறப்பு வாய்ந்தது.
மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று ஆறு கால பூஜையும், மாத பிரதோஷம், பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அட்சய திருதியை அன்று திருக்கல்யாண மகோத்சவமும், இறைவன்- இறைவி வீதியுலாவும் நடைபெறும்.
இங்கு தினசரி இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.