பக்தர்களுக்கு ஞானமும் யோகமும் அளிக்கும் தென் திருவாரூர் திருத்தலம்

இடைகால் சிவன் கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஞானமும், யோகமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே இடைகால் எனும் ஊரில் அமைந்துள்ளது, சிவகாமி அம்பாள் சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில். திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு நிகராக கருதப்படுவதால் பக்தர்களால் இத்தலம் 'தென் திருவாரூர்' என்று அழைக்கப்படுகிறது.
தல புராணம்
ஒரு சமயம் பூமியின் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. இதைக்கண்டு அனைவரும் மனம் பதைத்தனர். இந்த இடரை சரிசெய்ய அகத்திய முனிவரை உடனடியாக தென்பகுதிக்கு செல்ல ஈசன் கட்டளையிட்டார். அகத்தியர், இறைவனின் கட்டளைப்படி வட பகுதியில் இருந்து தென்பகுதி நோக்கி வந்தார். பணியை முடித்துவிட்டு தென் கயிலாயமான பொதிகை மலையில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார். அவர் தவத்தை மெச்சிய இறைவன் நேரில் தோன்றி, ''உமக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்க, "எமக்கு அடுத்த யுகத்தின் சக்திகளின் நிலையையும், எண்ணற்ற கோடி ஜீவராசிகளின் நிலையையும் பற்றி உபதேசம் செய்ய வேண்டும்'' என்று கேட்டார், அகத்தியர்.
அதற்கு ஈசன், ''பஞ்ச குருவாக நான் இந்த தென் பொதிகைச் சாரலிலே அமர்ந்து, உன் நிலையைப் போல் உள்ள முனிவர் யாவருக்கும் உபதேசம் செய்வேன். உனது சீடன் திருவூல முனிவர் அமர்ந்து தவம் செய்யும் 'திருஉளம்பற்றி' என்ற ஊருக்கு நீயும் வருவாய். அங்கு இருவருக்கும் உபதேசம் செய்வேன்'' என்று அருளினார். திருஉளம்பற்றி ஊருக்கு அகத்தியரும், திருவூல முனிவரும், ஓங்கார சொரூபினியாக அம்பாளும் வந்தனர். இறைவனும் அவர்களுக்கு உபதேசம் செய்தார்.
அம்பாள் இறைவனிடம் உபதேசம் பெற்ற இடத்தில் சிவகாமி சுந்தரியாக எழுந்தருள்கிறாள். இறைவனும் தியாகராஜர் என்ற திருநாமத்தோடு அருள்புரிகிறார். திருஉளம்பற்றி என்று அழைக்கப்பட்ட ஊரே தற்போது 'தென்திருவாரூர்' என்றும், 'இடைகால்' என்றும் அழைக்கப்படுகிறது.
பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் முள்ளிநாடு என்ற உள்நாட்டுப் பிரிவில் இவ்வூர் அடங்கியிருந்தது. இப்பகுதியில் இடைகால், தென்திருப்புவனம், அத்தாள நல்லூர், அரிகேசவநல்லூர், திருப்புடைமருதூர் என்ற பஞ்சபூதத் தலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் இடைகால், நிலத்தைக் குறிக்கும் தலமாகும்.
இக்கோவில் ஏறத்தாழ ஐந்து ஏக்கர் பரப்பளவில் நேர்த்தியுடன் கட்டப்பட்டுள்ளது. இது பாண்டிய நாட்டுக்குள் இருக்கும் பகுதிதான் என்றாலும் இப்பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னர்களே திருப்பணிகள் செய்திருக்கின்றனர். ராஜராஜ சோழன், தில்லையம்பதியில் இருந்து திருமுறை பாடல்களின் ஓலைச்சுவடிகளை உலகுக்கு அளித்தான். அதேபோல அவனுடைய புதல்வனான ராஜேந்திர சோழன், இந்த கோவிலுக்கு வேத விற்பனர்களை வரவழைத்து சிறப்பு பூஜைகள் செய்து திருமுறைகளை பரப்பினான் என்கிறது கோவில் வரலாறு.
கி.பி. 16-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் இத்தல இறைவனின் பெயர் 'திருவாம்பிகை ஈசுவரமுடையார்' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெருமானராயன் காளிங்கன் என்பவர் கோவிலின் வெளிச்சுற்றில் கொடிமரம் நிறுவி, பங்குனி உத்திர நாளில் இறைவன் திருவீதியுலா செல்லத் தேர் ஒன்றை உருவாக்கித் தந்ததாக கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணப்ப நாயக்கர், அச்சுததேவராயர், சதாசிவதேவராயர், கண்டியத் தேவன், ராமராஜவிட்டல ஈஸ்வர மகாராஜா, சின்ன பசவப்ப நாயக்கர், அஞ்செழுத்து உடையார் என பல ஆட்சியாளர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகளைச் செய்துள்ளனர்.
கோவில் அமைப்பு
இக்கோவிலின் முதன்மை வாசலில் மூன்று நிலை ராஜ கோபுரம் அமைந்துள்ளது. கோபுரத்தின் உள்பக்க விதானத்தில் நாயக்கர் கால ஓவியங்கள் அமைந்துள்ளன. இதையடுத்து பிரமாண்ட சிற்பங்களைக் கொண்ட 16 தூண்களை உடைய வசந்த மண்டபம் அமைந்துள்ளது. வசந்த மண்டபத்தை அடுத்து முகமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் இக்கோவில் அமைந்துள்ளது.
கோட்டத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி வித்தியாசமாக இடக் காலை மடக்கியும், வலக்காலை தொங்கவிட்டபடியும் உள்ளார். காலடியில் பாம்பு உள்ளது. உள்சுற்றில் சப்த கன்னியர், சுரதேவர், கன்னிமூலை கணபதி, கரியமாணிக்கப் பெருமாள், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன், அதிகார நந்தி ஆகியோருக்கான சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. இத்தலத்தில் நவக்கிரக சன்னிதி இல்லை.
பிரார்த்தனைகள்
சிவகாமி அம்பாள் சமேத தியாகராஜ சுவாமியை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகளும் எளிதில் கிட்டும். இந்த தலம் பஞ்ச குரு தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்த இடைகால் சிவத்தலத்திற்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஞானமும், யோகமும் பெறுவார்கள். மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சித்ரா பவுர்ணமி, ஐப்பசி பவுர்ணமி, மாசி மகம் ஆகிய 3 நாட்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேய்பிறை பஞ்சமியில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கந்த சஷ்டி, ஆடிப்பூரத்தையொட்டி அம்பாளுக்கு வளைகாப்பு, மார்கழி 30 நாட்கள் திருப்பள்ளியெழுச்சி, நவராத்திரி கொலு உற்சவம், தில்லைக் கூத்தருக்கு ஆண்டுக்கு ஆறுகால பூஜைகள் மற்றும் தினமும் இருவேளை நித்ய பூஜைகள் நடைபெறுகின்றன. உள்சுற்று முழுவதும் திருமாளிகை அமைப்பில் மண்டப கட்டுமானங்கள் அமைந்துள்ளது.
நாகர் சன்னிதியில் ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார பூஜை நடத்தப்படுகிறது. ஆவணி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. மாதாந்திர பவுர்ணமி நாளில் திருவாதவூரார் அருளிச் செய்த திருவாசக முற்றோதல் நடைபெறும். ஆண்டுதோறும் புரட்டாசி 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை காலை சூரிய உதயக் கதிர்கள் மூலவர் தியாகராஜப் பெருமான் மீது தங்கமயமாக படர்வது சிறப்பு அம்சமாகும்.
கோவில் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ஈசனின் திருமணக் கோலத்தை தரிசித்த நந்தி
அகத்தியர் தென் பொதிகை மலைக்கு வந்து தங்கியிருந்த வேளையில் அவருக்கு, மகேஸ்வரன் தனது திருமணக் கோலத்தைக் காட்டியருளினார். இந்த தரிசனம், அகத்திய முனிவருக்கு மட்டுமல்லாமல், இந்த இடைகால் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் நந்திதேவருக்கும் கிடைத்தது. இடைகால் திருத்தலத்தின் வெளிச்சுற்றில் பிரமாண்டமாக அமைந்துள்ள நந்தி மண்டபத்தில் உள்ள நந்திதேவர் தனது இடத்தில் இருந்தபடி தலையை மேற்குப் பக்கமாகத் திருப்பி இத்திருமணக் கோலத்தை இன்முகத்துடன் கண்டு தரிசிக்கும் காட்சியை இத்தலத்துக்கு வரும் பக்தர்களால் காணமுடிகிறது.