திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
விடுமுறையையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் கடந்த 12-ந்தேதி முதல் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. தொடர்ந்து நேற்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேற்று தை மாதத்திற்கான முதல் முகூர்த்த தினம் என்பதாலும் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.
கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த னர். சாமி தரிசனம் செய்ய 1½ மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்றதையும் காண முடிந்தது. இதனால் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், காஞ்சி சாலையில் இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.