தீபாவளி விருந்தாக அமைந்ததா டியூட் ? சினிமா விமர்சனம்

இயக்குனர் கீர்த்தீஸ்வரனின் டியூட் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
'சர்ப்ரைஸ் ஈவென்ட் கம்பெனி' நடத்தி வரும் பிரதீப் ரங்கநாதனும், மமிதா பைஜூவும் உறவினர்கள். அத்தை பையனான பிரதீப் ரங்கநாதன் மீது ஒரு கட்டத்தில் மமிதா பைஜூவுக்கு காதல் மலர்கிறது.
ஆனால் நம்மிடையே உள்ளது நட்புதான் என்று கூறி அந்த காதலை பிரதீப் ரங்கநாதன் நிராகரிக்கிறார். இதனால் வேலையில் இருந்து விலகி மேல் படிப்பு படிக்க சென்று விடுகிறார் மமிதா பைஜு.இதற்கிடையில் மமிதா பைஜூ மீது காதல் ஏற்பட, அவரை திருமணம் செய்யும் நோக்கில் அவரது தந்தையும், மத்திய மந்திரியுமான சரத்குமாரை அணுகி விஷயத்தை சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதற்கு சரத்குமாரும் சம்மதிக்க திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது.
பெரிய பெரிய வி.ஐ.பி.கள் கலந்து கொள்ளும் இந்த திருமணத்தில் தான் வேறு ஒருவரை காதலிப்பதாக மமிதா பைஜூ சொல்ல அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது.அதன் பிறகு என்ன ஆனது? பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜு திருமணம் நடந்ததா? யாருடைய காதல் வெற்றி பெற்றது? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
ஒட்டுமொத்த படத்தையும் தோளில் சுமந்துள்ள பிரதிப் ரங்கநாதன் கிடைத்த கேப்பில் எல்லாம் புகுந்து விளையாடி இருக்கிறார். அவரது எனர்ஜி இளைய தலைமுறைகளுக்கு கொண்டாட்டம். நகைச்சுவை ஆக்சன் சோகம் என எல்லா பரிமாணங்களிலும் கலக்கி இருக்கிறார்.
ஜாடிக்கு ஏற்ற மூடி போல பக்காவாக பிரதீப் ரங்கநாதனுக்கு பொருந்தி இருக்கிறார் மமிதா பைஜூ. கதாபாத்திரத்தை உணர்ந்து கடமையாற்றி இருக்கிறார்.
சரத்குமாரின் அனுபவ நடிப்பு படத்துக்கு பெரும் பலம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என துள்ளி குதிக்கிறார்.நடிகர் நடிகைகள் அத்தனை பேரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தது சிறப்பு.
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. சாய் அபயங்கரின் இசை ஆட்டம் போட வைக்கிறது. 'ஊரும் பிளட்' பாடலுக்கு ஒன்ஸ்மோர் போகலாம். லூட்டியான காட்சிகள் படத்துக்கு பலம். பெரும்பாலான காட்சிகளை யூகிக்க முடிவது பலவீனம். லாஜிக் மீறல் இவ்வளவு கூடாது.எதார்த்தமான காதல் கதை தான் என்றாலும் அதில் புதுமையான விஷயத்தை புகுத்தி இளைய தலைமுறை என கொண்டாடும் படமாக இயக்கி இருக்கிறார் கீர்த்தீஸ்வரன்.
டியூட் - இளசுகளுக்கு மட்டும்.






