விஷ்ணு விஷாலின் “ஆர்யன்”: சினிமா விமர்சனம்

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
பெண் நிருபரான ஷ்ரத்தா ஸ்ரீநாத் தொகுத்து வழங்கும் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் செல்வராகவன் திடீரென துப்பாக்கி முனையில் அனைவரையும் பிணைய கைதிகளாக்குகிறார். ‘அடுத்த ஐந்து நாட்களில் ஐந்து பேரை கொலை செய்யப்போகிறேன். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்’ என்று மிரட்டலும் விடுக்கிறார். சொன்னபடியே கொலைகளும் அரங்கேற தொடங்க அதிர்ச்சி மேலோங்குகிறது. இதையடுத்து தொடர் கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால் தலைமையில் குழு ஒன்றை காவல்துறை அமைக்கிறது. கொலையாளி செல்வராகவனை பிடிக்காமல் தொடர் கொலைகளை தடுக்க களம் இறங்கும் விஷ்ணு விஷாலுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அவை என்ன? தொடர் கொலைகளை அவர் தடுத்தாரா? இதன் பின்னணி தான் என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
காக்கிச்சட்டையில் காட்டும் மிடுக்கை நடிப்பிலும் காட்டி அசத்தியுள்ளார், விஷ்ணு விஷால். தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பாதிப்புகளை பிரதிபலிக்கும் இடங்களில் முதிர்ச்சியான நடிப்பில் கைதட்டல் பெறுகிறார்.சைக்கோ கொலையாளியாக வரும் செல்வராகவன் தோற்றத்தில் பயமுறுத்தவில்லை என்றாலும், செய்யும் கொலைகளில் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். ஒரே பாணியிலான பேச்சு, நடிப்பு.
கொடுத்த கதாபாத்திரத்தில் குறைவின்றி நடித்து கொடுத்திருக்கிறார், ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதிகம் வேலையில்லை என்றாலும், அழகால் கவனிக்க வைத்திருக்கிறார் மானசா. கருணாகரன், அவினாஷ் என அனைவருமே கதையின் ஓட்டத்துக்கு ஏற்ப பயணித்துள்ளார்கள். படத்தின் பரபரப்பு குறையாமல் பார்த்துக்கொண்டதில் ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் பெரும்பங்கு வகிக்கிறது.
விறுவிறுப்பாக கதை நகர்ந்தாலும், லாஜிக் மீறல்கள் இருப்பது பலவீனம். வித்தியாசமான கதைக்களத்தை மெதுவான திரைக்கதையால் நகர்த்தியிருக்கிறார்கள்.
கொலையாளி யார்? என்பது தெரிந்து விட்டாலும், அவரைப் பற்றி சிந்திக்க விடாமல், கொலைகள் மற்றும் அதனை தடுக்க முயற்சிக்கும் கதாநாயகனின் பயணத்தை விறுவிறுப்பாக சொல்லி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் கே.பிரவீன்.
ஆர்யன் - புதிய முயற்சி.






