"வேடுவன்" சினிமா விமர்சனம்


வேடுவன் சினிமா விமர்சனம்
x

கண்ணா ரவி நடித்துள்ள "வேடுவன்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

முன்னணி நடிகரான கண்ணா ரவி, ஒரு உண்மை சம்பவ கதையில் நடித்துள்ளார். கதைப்படி, கண்ணா ரவி ரவுடி ஒருவரை ‘என்கவுண்ட்டர்' செய்ய வேண்டும். முக்கியமான ஒரு தருணத்தில் ‘என்கவுண்ட்டர்' செய்யவுள்ள சஞ்சீவ், தனது முன்னாள் காதலி வினுஷா தேவியின் கணவர் என்பதும், ரவுடியாக இருந்த அவர் தற்போது ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் மனிதராக வலம் வருவதும் கண்ணா ரவிக்கு தெரியவருகிறது.

மனம் சொல்வதை கேட்பதா? உயர் அதிகாரியின் கட்டளைக்கு கீழ்படிவதா? என்ற இக்கட்டான சூழலில் கண்ணா ரவி சிக்கிக்கொள்கிறார். படத்தில் எடுக்கப்படும் இந்த காட்சிகள் நிஜ வாழ்க்கையிலும் கண்ணா ரவிக்கு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. சஞ்சீவை திட்டமிட்டபடி கண்ணா ரவி என்கவுண்ட்டர் செய்தாரா? சினிமா காட்சிகள் ஏன் கண்ணா ரவியின் நிஜ வாழ்க்கையை பாதிக்கிறது? இதற்கெல்லாம் பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.

கண்ணா ரவியின் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. சினிமா படத்துக்காக அவர் போடும் வேடங்களில் உணர்வுகளை பிரதிபலிக்கிறார். கடமையா?, மனசாட்சியா? என்று யோசிக்கும் இடங்களில் ‘ஸ்கோர்' செய்துள்ளார். தாதாவாக வரும் சஞ்சீவ், அனுபவ நடிப்பால் அசத்துகிறார். நல்ல தேர்வு.

ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா என நடித்த அத்தனை பேரும் கதாபாத்திரங்களில் நிறைவு. சீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவும், விபின் பாஸ்கரின் இசையும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறது.

கதாபாத்திரங்களின் தேர்வும், நடிப்பும் பலம். அதேவேளை நாடகம் போன்று நகரும் பெரும்பாலான காட்சிகள் பலவீனம். திரைக்கதையில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம். ‘கிளைமேக்ஸ்' காட்சியில் எதிர்பார்த்த துடிப்பு ‘மிஸ்ஸிங்'.

வேடுவன் - இன்னும் வீரியம் தேவை

1 More update

Next Story