"நறுவீ" சினிமா விமர்சனம்

இயக்குனர் எம்.சுபாரக் இயக்கிய நறுவீ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலையோர கிராமத்தில் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஆண்கள் நுழைந்தால் அவர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. இத்தகைய ஆபத்தான காட்டுப்பகுதிக்குள் ஆய்வு செய்வதற்காக, காதல் ஜோடியான வி.ஜே.பப்பு - பாதினி குமார் உள்ளிட்ட 5 பேர் கொட குழுவினர் செல்கிறார்கள்.
தங்கள் ஆராய்ச்சியை அவர்கள் தொடங்கும் வினாடி முதல் அவர்களை சுற்றி வினோதமான விஷயங்கள் நடைபெற தொடங்குகிறது. ஒருகட்டத்தில் தங்களை அறியாமலேயே அந்த காட்டுக்குள் 5 பேரும் சென்றுவிடுகிறார்கள். அதன்பிறகு என்ன நடந்தது? அவர்களின் கதி என்ன? அந்த மர்மங்களுக்கு என்ன தான் காரணம்? என்ற பல்வேறு மர்ம முடிச்சுகளுக்கு விடையாக மீதி கதை.
கதாநாயகனாக வரும் ஹரிஷ் அலக், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். அளவான நடிப்பை காட்டி அழகு சேர்க்கிறார். கதாநாயகிகளான கேத்தரின், வின்சு ஆகியோரின் இயல்பான நடிப்பும், வனப்பும் ரசிக்க வைக்கிறது.
வி.ஜே.பப்பு - பாதினிகுமார் ஜோடி சிரிப்புக்கும் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். ஜீவா ரவி, பிரவீனா, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ்.ராஜா, சாரதா நந்தகோபல் ஆகியோரது அனுபவ நடிப்பும் கைக்கொடுத்துள்ளது.
ஆனந்த் ராஜேந்திரன் ஒளிப்பதிவில் காடுகளின் அழகை தாண்டி அடர்த்தி பயமுறுத்துகிறது. அஸ்வத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓகே ரகம். பல இடங்களில் சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்றாலும், அதை காட்சிப்படுத்திய விதத்தில் தடுமாறி இருக்கிறார்கள். திரைக்கதையிலும் வேகம் இல்லை.
பல்வேறு சமூக பிரச்சினைகளை, சஸ்பென்ஸ் - திரில்லர் ரகத்தில் ரசிக்கும்படியான கதைக்களமாக கொடுத்து, கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் எம்.சுபாரக்.
நறுவீ - ஆபத்தான மலர்.