முனீஸ்காந்தின் “மிடில் கிளாஸ்” - சினிமா விமர்சனம்

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் வெளியான ‘மிடில் கிளாஸ்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த முனீஷ்காந்துக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை ஒரு வடமாநில வாலிபருக்கு சொந்த கடையை எழுதி வைத்தது தெரியவருகிறது. அதுதொடர்பான கடன் பத்திரமும் கிடைக்கிறது. கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் முனீஷ்காந்த், அந்த வடமாநில ஆசாமியை தேடிச்செல்ல, அவரோ பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து ரூ.1 கோடிக்கு 'செக்' எழுதி தருகிறார்.
பெரிய தொகை வரப்போகிறது என்ற எண்ணத்தில் முனீஷ்காந்தின் மனைவி விஜயலட்சுமி ஆடம்பர செலவுகளில் ஈடுபடுகிறார். தனது தம்பி திருமணத்துக்கு கந்து வட்டிக்கு கடன் வாங்கி சீர் செய்கிறார். இதற்கிடையில் அந்த 'செக்' மாயமாகி போகிறது. 'செக்' கொடுத்த 'சேட்டும் உயிரிழந்து போகிறார். இதனால் நெருக்கடிக்கு ஆளாகும் முனீஷ்காந்த் நண்பர்களின் உதவியுடன் காணாமல் போன 'செக்'கை தேடுகிறார். 'செக்' கிடைத்ததா? முனீஷ்காந்தின் பிரச்சினைகள் தீர்ந்ததா? என்பதே கதை.
காமெடியில் கலக்கிய முனீஷ்காந்த், சீரியஸ் கதாபாத்திரத்திலும் கவனம் ஈர்க்கிறார். அவரது எதார்த்த நடிப்பு கைகொடுத்துள்ளது. கிடைக்கும் வேலைகளை செய்து காசு சேகரிக்கும் 'மிடில் கிளாஸ்' பெண்மணியாகவே வாழ்ந்திருக்கிறார் விஜயலட்சுமி. கணவருடன் அவர் போடும் சண்டைகள் கலகலப்பு.
ராதாரவி, காளி வெங்கட், மாளவிகா அவினாஷ், வேலராமமூர்த்தி, கோடங்கி வடிவேலு, குரைஷி ஆகியோரின் நடிப்பிலும் குறைவில்லை. சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவும், பிரணவ் முனிராஜின் இசையும் ஓகே ரகம்.
முதல் பாதியை ஒப்பிடுகையில் இரண்டாம் பாதியில் வேகம் இல்லை. காட்சிகள் யூகிக்க முடிவதும் பலவீனம். லாஜிக் மீறல்களும் லேசாக இடிக்கத்தான் செய்கின்றன. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
'மிடில் கிளாஸ்' வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த நிகழ்வுகளை காட்சிகளாக அடுக்கி ரசிக்க வைத்துள்ளார், இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம்.
மிடில் கிளாஸ் - பேராசை கூடாது.






