"மருதம்" சினிமா விமர்சனம்

இயக்குனர் வி.கஜேந்திரன் இயக்கத்தில் விதார்த் நடித்துள்ள "மருதம்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
விவசாயியான விதார்த், கிராமத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். தனது மகனை பெரிய கான்வென்ட் பள்ளியில் சேர்த்து விடுகிறார். இதற்காக அதிகளவில் கடனும் வாங்குகிறார்.
இதற்கிடையில் வாங்காத கடனுக்காக, தனது விவசாய நிலத்தை வங்கி ஏலம் விட்டதை அறிந்து அதிர்ச்சியில் உறைகிறார். வங்கியில் முறையிடும் விதார்த்துக்கு, அவரது தந்தையின் பெயரில் கடன் வாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ஏதோ மோசடி நடந்திருப்பதை உணரும் விதார்த் தனது நிலத்தை மீட்டாரா? மோசடியில் ஈடுபட்டது யார்? இதன் பின்னணி என்ன? என்பதே மீதி கதை.
நிலத்தை இழந்த விவசாயி கதாபாத்திரத்தில் மிகையில்லாத நடிப்பால் கவருகிறார், விதார்த். நிலத்தை மீட்க போராடும் காட்சிகளில் அனுபவ நடிப்பால் கலங்கடிக்கிறார். பொருந்தாத வேடம் என்றாலும், பொருத்தமான நடிப்பை காட்டி அசத்துகிறார், ரக்ஷனா. சிறுவனாக நடித்துள்ள கார்த்திக் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. அருள்தாஸ், சரவண சுப்பையா, மாறன், நாகராஜ் ஆகியோரின் நடிப்பு நினைவில் நிற்கிறது.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் மண் மணம் வீசுகிறது. அருள் கே.சோமசுந்தரத்தின் ஒளிப்பதிவு கிராமத்து பசுமையைக் காட்சிப்படுத்தி இருக்கிறது. எதார்த்தம் நிறைந்த காட்சிகள் பலம். லாஜிக் மீறல் காட்சிகள் பலவீனம். நெல் அரவை எந்திரத்துக்கு வாங்கிய கடனுக்கு மொத்த நிலத்தையும் ‘ஜப்தி' செய்துவிட முடியுமா? பல காட்சிகளில் வசனங்கள் ‘எமோஷனல்' ரீதியாக தொடவில்லை. திரைக்கதையில் அடர்த்தி தேவை.
விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் சலுகைகளை மோசடியாக சிலர் எப்படி சுரண்டுகிறார்கள்? என்பதை சொல்லி, அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்து திரும்பி பார்க்க வைத்துள்ளார், இயக்குனர் வி.கஜேந்திரன்.
மருதம் - மார்கழி மழை.






