லோகா: சாப்டர் 1 - சந்திரா படம் எப்படி இருக்கிறது? - சினிமா விமர்சனம்

டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'லோகா: சாப்டர் 1 - சந்திரா'.
படக்குழு
நடிகர்கள் : கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சாண்டி.
இயக்குநர் : டொமினிக் அருண்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
தயாரிப்பாளர் : துல்கர் சல்மான் (வேஃபேரர் பிலிம்ஸ்)
ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
படத்தொகுப்பு : சாமன் சாக்கோ
விமர்சனம்
முன்னணி நடிகரான துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம். பெங்களூருவில் வசித்து வரும் நஸ்லென், தனது வீட்டருகே குடிவரும் கல்யாணி பிரியதர்ஷனிடம் காதல் கொள்கிறார். பகலில் வீட்டிலேயே முடங்கி இருக்கும் கல்யாணி, இரவில் மட்டும் வேலைக்கு செல்கிறார்.
இதற்கிடையில் மனித உறுப்புகளுக்காக சிலர் கடத்தப்படுகின்றனர். அந்த வரிசையில் கல்யாணியை கடத்த ஒரு கும்பல் அவரை பின்தொடருகிறது. அதேவேளை காதல் மயக்கத்தில் கல்யாணியை நஸ்லெனும் பின்தொடருகிறார்.
அப்போது தன்னை கடத்த வரும் இருவரையும் கல்யாணி மோகினி அவதாரம் எடுத்து கொல்வதை பார்த்து நஸ்லென் வாயடைத்து போகிறார். இதற்கிடையில் கல்யாணியை போல விசேஷ சக்தி பெறும் போலீஸ் அதிகாரி சாண்டி, கல்யாணியை பழிவாங்க துடிக்கிறார். கல்யாணிக்கு 'சூப்பர் பவர்' வந்தது எப்படி? அவர் யார்? அவருக்கும், சாண்டிக்கும் இடையேயான மோதல் என்ன ஆனது? என்பது மீதி கதை.
சாதுவான கதாபாத்திரங்களில் நடித்துவந்த கல்யாணி பிரியதர்ஷன், முதன்முறையாக ஆக்ஷன் அவதாரத்தில் கலக்கி இருக்கிறார். சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடுகிறார். சராசரி இளைஞனாக நஸ்லென் தன் பங்குக்கு நியாயம் சேர்த்துள்ளார். போலீஸ் அதிகாரியாக சாண்டி, மாறுபட்ட முகத்தை காட்டி பயமுறுத்துகிறார். ஆனாலும் அவரது கதாபாத்திரத்துக்கு வலு இல்லை.
துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், சவுபின் சகிர் ஆகியோர் ஓரிரு காட்சிகளே வந்தாலும், கவனம் ஈர்க்கிறார்கள். நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கின்றன.
பரபரப்பு, விறுவிறுப்பு என கொட்டி கிடந்தாலும், திரைக்கதையில் தெளிவு இல்லை. கல்யாணி எதற்காக பெங்களூரு வருகிறார்? அவரது நோக்கம் என்ன? என்பது சொல்லப்படவில்லை. புதிய தளத்தில் கதை சொல்லி, திருப்பங்கள் நிறைந்த காட்சிகளாய் படத்தை நகர்த்தியுள்ளார், இயக்குநர் டொமினிக் அருண்.
லோகா: சாப்டர் 1 - சந்திரா - மோகினி ஆட்டம்.
டிரைலர்