''குற்றம் புதிது'' - சினிமா விமர்சனம்


Kuttram Pudhithu - Review
x

திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் மூலம் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங்.

சென்னை,

காணாமல் போன மகளை தேடும் போலீஸ் அதிகாரியின் கதை.

போலீஸ் அதிகாரியான மதுசூதனன் ராவின் மகள் சேஷ்விதா திடீரென மாயமாகி போகிறார். மகளை காணாமல் பதறிப்போகும் மதுசூதனன் ராவுக்கு, அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

கொலையாளி என்று ஒருவரை போலீசார் சந்தேகிக்கும் சூழ்நிலையில், சேஷ்விதாவை கொலை செய்ததாக கூறி போலீசில் சரணடைகிறார் தருண் விஜய். மேலும் சிலரை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளிக்கிறார்.

தருண் விஜய் கொலை செய்ததாக கூறப்படும் நபர்கள் உயிருடன் இருப்பதை போலீசார் அறிகிறார்கள். உயிருடன் இருப்பவர்களை கொன்றதாக தருண் விஜய் சொன்னது ஏன்? சேஷ்விதா என்ன ஆனார்? என்பதே மீதி கதை.

வெகுளித்தனம் ஒருபக்கம், கொடூர முகம் மறுபக்கம் என இருவேறு கதாபாத்திரங்களில் கலக்கி இருக்கிறார் தருண் விஜய். போலீசாரையும், நீதிபதியையும் 'அங்கிள்' என்று அவர் அழைக்கும் இடங்களில் கலகலப்பு.

பாசக்கார மகளாக வரும் சேஷ்விதாவின் அலட்டல் இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. கலவரமான காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம். மதுசூதனன் ராவ், நிழல்கள் ரவி, பாய்ஸ் ராஜன் ஆகியோரின் அனுபவ நடிப்பு கை கொடுத்திருக்கிறது. ராம்சின் நடிப்பை பாராட்டலாம்.

ஜேசன் வில்லியம்சின் ஒளிப்பதிவும், கரண் கிருபாவின் இசையும் படத்துடன் ஒன்றச் செய்கிறது. யூகிக்க முடியாத காட்சிகள் படத்துக்கு பலம். திரைக்கதையில் அழுத்தம் இல்லை. விசாரணை காட்சிகளில் இன்னும் சுவாரசியம் இருந்திருக்கலாம்.

வழக்கமான திரில்லர் கதை என்றாலும், திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் மூலம் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங்.

குற்றம் புதிது - பரபரப்பு குறைவு.

1 More update

Next Story