'இந்திரா' திரைப்பட விமர்சனம்

இயக்குனர் சபரீஷ் நந்தா வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கும் கதை
போலீஸ் இன்ஸ்பெக்டரான வசந்த் ரவி, மது பழக்கத்தால் பார்வை இழக்கிறார். போலீஸ் வேலையில் இருந்தும் விலகுகிறார். இன்னொரு புறம் சுனில் சிலரை கொலை செய்து, அவர்களின் இடது கையை வெட்டி வீசுகிறார். அவரை பிடிக்க முடியாமல் காவல்துறை தடுமாறுகிறது.
ஒருகட்டத்தில் வசந்த் ரவியை கண்ணுக்கு கண்ணாக கவனித்து வரும் மனைவி மெஹ்ரின் பிர்சாடாவும் அதேவரிசையில் கொல்லப்படுகிறார். மனைவியை இழந்து தவிக்கும் வசந்த் ரவி, கண் தெரியாத சூழலிலும் நண்பர்களின் உதவியுடன் சுனிலை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கிறார். விசாரணையில் 'மெஹ்ரின் பிர்சாடாவை மட்டும் நான் கொலை செய்யவில்லை' என சுனில் கூற, திருப்பம் உண்டாகிறது.
மெஹ்ரின் பிர்சாடாவை கொலை செய்தது யார்? இந்த கொலைக்கான பின்னணி என்ன? கொலைகாரனை வசந்த் ரவி கண்டுபிடித்தாரா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையாக மீதி கதை.
பார்வை இழந்தோரின் வலி, வேதனைகளை கண்முன் நிறுத்தி நடிப்பில் 'ஸ்கோர்' செய்கிறார், வசந்த் ரவி. ஆனால் படம் முழுக்க அவர் 'டென்ஷன்' பேர்வழியாக சுற்றுவது ஏன்?
அழகாலும், வசீகர சிரிப்பாலும் கவரும் மெஹ்ரின் பிர்சாடா, முத்தக்காட்சியிலும் குறை வைக்கவில்லை. 'அழுகை' காட்சிகளில் மட்டும் இன்னும் பயிற்சி தேவை. சுனிலின் வில்லத்தனமும், கொலை செய்யும் போக்கும் பயமுறுத்துகிறது. அனிகா சுரேந்திரனின், கல்யாண்குமார், ராஜ்குமார் உள்ளிட்டோரின் நடிப்பிலும் நேர்த்தி.
பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவும், அஜ்மல் தஸ்சினின் இசையும் படத்தை தாங்கி பிடித்துள்ளது. விறுவிறுப்பான கதைக்களமும், யூகிக்க முடியாத காட்சிகளும் படத்தின் பலம். ஆனால் தொடர் கொலைக்கான காரணம் ஒட்டவில்லை. வசந்த் ரவிக்கு வேலை பறிபோனதற்கான காரணத்தை சரியாக சொல்லவில்லையே...
சைக்கோ கொலை பற்றி படம் தான் என்றாலும், புதுமையான கதைக்களத்தில் காட்சிகளை நகர்த்தி வியக்க வைத்துள்ளார், இயக்குனர் சபரீஷ் நந்தா.
இந்திரா - பூதம் கிளம்பிய கதை.