சோனியா அகர்வால் நடித்த "வில்" படம் எப்படி இருக்கிறது?- விமர்சனம்

எஸ்.சிவராமன் எழுதி இயக்கியுள்ள "வில்" திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
ஆந்திராவைச் சேர்ந்த பெரும் பணக்காரரான பதம் வேணுகோபால், தனது சொத்துகளை இரண்டு மகன்களுக்கு உயில் எழுதி வைக்கிறார். ஆனால் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை மட்டும் ஷ்ரத்தா என்ற பெண்ணுக்கு எழுதி வைக்கிறார். இதையறிந்து கொள்ளும் பதம் வேணுகோபாலின் வாரிசுகள், போலியாக ஒரு பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பை தங்கள் பெயருக்கு மாற்ற முயற்சிக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் ஏதோ சிக்கல் இருப்பதை உணரும் நீதிபதி சோனியா அகர்வால், நீதிமன்ற காவல் அதிகாரியான விக்ராந்திடம் வழக்கின் விசாரணையை ஒப்படைக்கிறார். இதில் பல அதிர்ச்சிக்குரிய விஷயங்கள் தெரிய வருகிறது. அவை என்ன? என்பதே மீதி கதை.
நீதிபதியாக சோனியா அகர்வால் எப்போதுமே முழுமையான ‘மேக்கப்' உடன் வலம் வருகிறார். அதேவேளை அலட்டல் இல்லாத நடிப்பாலும் கவர்கிறார். விக்ராந்துக்கு போலீஸ் வேடம் கச்சிதமாக பொருந்துகிறது. பல பரிமாணங்களை முகத்தில் வெளிப்படுத்தி மேம்பட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.
யாரும் ஏற்க துணியாத கதாபாத்திரத்தில் நடித்ததற்காகவே அலக்கியாவை பாராட்டலாம். பதம் வேணுகோபால் உள்ளிட்டோரின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது. டி.எஸ்.பிரசன்னாவின் ஒளிப்பதிவில் ஆச்சரியம் இல்லாவிட்டாலும் ரசிக்க முடிகிறது. சவுரப் அகர்வாலின் இசை சுமார் ரகம்.
திருப்பமான காட்சிகள் பலம் என்றாலும், பொறுமையான திரைக்கதை சோதிக்கிறது. நீதிமன்ற காட்சிகள் தவிர மற்ற காட்சிகளில் தொய்வு தெரிகிறது. இரண்டாம் பாதியில் கவனம் செலுத்தி இருக்கலாம். உயில் சம்பந்தப்பட்ட சட்ட விஷயங்களில் உள்ள ஆச்சரியமான தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் படத்தை எழுதி இயக்கியுள்ளார் எஸ்.சிவராமன்.
வில் - வேகம் குறைவு






