வெற்றி பெற்றதா சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி..? - 'மதராஸி' விமர்சனம்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் மதராஸி.
படக்குழு
நடிகர்கள் : சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த்
இயக்குநர் : ஏ.ஆர்.முருகதாஸ்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : சுதீப் இளமோன்
படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்
விமர்சனம்
தமிழகத்தில் ஊடுருவும் துப்பாக்கி கலாசாரத்தை வேரறுக்கும் கதை. தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தை புகுத்தும் நோக்கில் வட இந்தியாவில் இருந்து ஆறு கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை வித்யூத் ஜம்வாலும், ஷபீர் கல்லரக்கலும் ('சார்பட்டா பரம்பரை' படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர்) கொண்டு வருகிறார்கள். அதை தடுத்து நிறுத்த போலீசார் முயற்சித்தும், அவர்களை மீறி துப்பாக்கிகளை சென்னைக்கு கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் ஒரு தொழிற்சாலையில் துப்பாக்கிகளை பதுக்கி வைக்கிறார்கள். காவல்துறையின் அதிரடி படையிலேயே சமூக விரோதிகளின் ஆதரவாளர்களும் இருந்து இந்த சதி செயல்களை அரங்கேற்றுகிறார்கள். இதற்கிடையில் காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயற்சிக்கும் சிவகார்த்திகேயனை வைத்து அந்த துப்பாக்கிகளை அழிக்க போலீஸ் அதிகாரி பிஜு மேனன் முடிவு செய்கிறார்.
அதன்படி அந்த தொழிற்சாலைக்குள் சாதாரண தொழிலாளியாக சிவகார்த்திகேயன் நுழைகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற உண்மை போலீசாருக்கு தெரிய வருகிறது. தொழிற்சாலைக்கு செல்லும் சிவகார்த்திகேயன் வில்லன்களை கண்டும் அவர்களை கொலை செய்ய தயங்குகிறார். அதன் பிறகு என்ன ஆனது? பதுக்கி வைத்த துப்பாக்கிகளை சிவகார்த்திகேயன் அழித்தாரா, இல்லையா? என்பதே மீதி கதை.
அதிரடி ஆக்சனில் புகுந்து விளையாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். சண்டைக் காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்து கலக்கி இருக்கிறார். தற்கொலைக்காக முயற்சிக்கும் போதெல்லாம் நகைச்சுவைக்கு ஆட்கள் இல்லையே என்ற குறையையும் போக்கியிருக்கிறார்.
அழகாலும், யதார்த்த நடிப்பாலும் ருக்மினி வசந்த் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். காதல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். வில்லன்களாக வித்யூத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல் பயமுறுத்தி உள்ளனர். அனுபவ நடிப்பால் பிஜு மேனன் கவருகிறார். விக்ராந்தின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. இதர நடிகர், நடிகைகள் அத்தனை பேரும் கொடுத்த வேலைக்கு சிறப்பு சேர்த்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
சுதீப் இளமோன் ஒளிப்பதிவு படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது. ஆக்சன் காட்சிகளில் மாயாஜாலம் செய்துள்ளார். அனிருத்தின் இசை ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பிரமாதம். சில காட்சிகளை யூகிக்க முடிந்தாலும் பரபரப்பான திரைக்கதை அதை மறக்கடித்து விடுகிறது. தொழிற்சாலையில் நடக்கும் சண்டை காட்சிகள் திக் திக் ரகம்.
சமூக பேரழிவுகளை தொடர்ந்து படங்களில் முன்னிறுத்தி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த முறை துப்பாக்கி கலாசாரத்தை கையில் எடுத்துள்ளார். பரபரப்பான திருப்பம் நிறைந்த காட்சிகளாய் படத்தை இயக்கி மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார்.
மதராஸி - ஆபத்தானவன்.
டிரைலர்