கவுரி கிஷனின் “அதர்ஸ்” - சினிமா விமர்சனம்

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் கவுரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னையில் நடக்கும் ஒரு வேன் விபத்தில் சிலர் இறந்து போகிறார்கள். இதுகுறித்து விசாரிக்க வரும் ஆதித்யா மாதவன், அதன் பின்னணியில் ஆதரவற்றோர் இல்லங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிகிறார். இன்னொருபுறம் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளுக்கு சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கான உண்மைகளை டாக்டரான கவுரி கிஷன் கண்டுபிடிக்கிறார். இந்த 2 சம்பவங்களும் ஒரு புள்ளியில் இணையும் இடத்தில் மருத்துவத்துறையில் மிகப்பெரிய முறைகேடுகள் நடப்பது தெரியவருகிறது. 2 சம்பவங்களுக்கும் காரணங்கள் என்ன? மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடு என்ன? அதனை ஆதித்யா மாதவன் கண்டுபிடித்தாரா, குற்றவாளிகளை களையெடுத்தாரா? என்பதே பரபரப்பான மீதி கதை.
மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ஆதித்யா மாதவன் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் 'ஸ்கோர்' செய்கிறார். தமிழ் சினிமாவுக்கு நல்வரவு. அலட்டல் இல்லாத நடிப்பால் ஆச்சரியப்படுத்தும் கவுரி கிஷன், கதையை தாங்கி பிடித்துள்ளார். பாடல் காட்சியில் வசீகரிக்கிறார்.

மிடுக்கான போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அஞ்சு குரியன் சண்டை காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். முனீஷ்காந்த், நண்டு ஜெகன், ராமதாஸ், சுந்தரராஜன், மாலா பார்வதி என அனைவருமே சிறப்பு. காமெடி காட்சிகளை 'கட்' செய்திருக்கலாம்.
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் பரபரப்புக்கு துணை நின்றுள்ளது. யூகிக்க முடியாத காட்சிகள் பலம். முதல் பாதியில் திரைக்கதை மெதுவாக நகருகிறது. சில காட்சிகளில் அழுத்தங்கள் இல்லாததும், தெளிவு இல்லாததும் உறுத்தல். விசாரணை காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

மருத்துவத்துறையில் இப்படியும் நடக்குமா? என்ற திகைப்புடன் திரைக்கதையை நகர்த்தி திடுக்கிட வைத்துள்ளார், இயக்குனர் அபின் ஹரிஹரன்.
அதர்ஸ் - பீதி.






