"ராம் அப்துல்லா ஆண்டனி" படத்தின் சினிமா விமர்சனம்


ராம் அப்துல்லா ஆண்டனி படத்தின் சினிமா விமர்சனம்
x

ஜெயவேல் இயக்கத்தில் பூவையார் நடித்த "ராம் அப்துல்லா ஆண்டனி" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

ஒரே வகுப்பில் படிக்கும் நண்பர்களான பூவையார், அஜய், அர்ஜுன் ஆகிய மூன்று பேரும், தொழில் அதிபர் வேல ராமமூர்த்தியின் பேரனை கடத்துகிறார்கள். அவனை துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்து வீசுகிறார்கள். இந்தக் கொலை வழக்கு பற்றி விசாரிக்கும் இன்ஸ்பெக்டராக தீனா நியமிக்கப்படுகிறார். அதேசமயம் அந்த காவல் நிலையத்துக்கு சவுந்தரராஜா போலீஸ்காரராக வருகிறார். கொலை வழக்கில் துப்பு துலக்கும் தீனா ஒரு கட்டத்தில் மூன்று சிறுவர்களையும் பிடிக்கிறார். அந்த சிறுவர்களை கொலை செய்ய வேல ராமமூர்த்தி துடிக்கிறார். பள்ளி மாணவர்கள் ஏன் இந்த படுகொலையில் ஈடுபட்டார்கள்? கொலைக்கான பின்னணி என்ன? இறுதியில் என்னதான் நடந்தது? என்பதே பரபரப்பான மீதி கதை.

பள்ளி மாணவர்களாக வரும் பூவையார், அஜய், அர்ஜுன் ஆகிய மூன்று பேரும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், சில காட்சிகளில் நம்பகத்தன்மை கொஞ்சம் மறைகிறது. ஆனாலும் முடிந்தவரை முயற்சித்து கவனிக்க வைக்கிறார்கள். போலீஸ்காரராக வரும் சவுந்தரராஜா எதார்த்தமான நடிப்பால் அசத்துகிறார். சண்டைக் காட்சிகளில் அவரது மெனக்கெடல் தெரிகிறது. தீனாவின் நடிப்பு மிரட்டுகிறது. வேல ராமமூர்த்தியின் வில்லத்தனம் ‘அதே டெய்லர்... அதே வாடகை...' ரகம்.

தலைவாசல் விஜய், ஜாவா சுந்தரேசன், வினோதினி, கிச்சா ரவி என அனைவருமே குறைவில்லாமல் நடித்து கொடுத்திருக்கிறார்கள். ஹரிதாவின் அழுத்தமான நடிப்பை பாராட்டலாம். எல்.கே.விஜய்யின் ஒளிப்பதிவில் காட்சிகள் பரபரப்பு. கிருஷ்ணா சேர்த்தனின் இசையில் ஆங்காங்கே ஏனோ கரகரப்பு.

கொலைக்கான பின்னணியில் உள்ள சமூக கருத்து படத்துக்கு பலம். அதற்காக பள்ளி மாணவர்கள் கையில் ஆயுதங்களை கொடுக்கலாமா? பல முக்கியமான காட்சிகளுக்கு விளக்கம் சொல்லப்படவில்லை. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் காணாமல் போய்விட்டது.

எது எப்படியோ பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு கருத்தை புகுத்தி இருப்பதில் இயக்குனர் ஜெயவேல் கவனம் ஈர்த்துவிட்டார்.

ராம் அப்துல்லா ஆண்டனி - திரைக்கதையைக் கொஞ்சம் கவனி...

1 More update

Next Story