"பேட் கேர்ள்" திரைப்பட விமர்சனம்

இயக்குனர் வர்ஷா பரத் இயக்கியுள்ள பேட் கேர்ள் படம் எப்படி இருக்கிறது என்ப காண்போம்.
சென்னை,
தனக்கான சுதந்திரத்தை விரும்பும் இளம்பெண்ணின் கதை.
கட்டுப்பாடான குடும்பத்தைச் சேர்ந்த அஞ்சலி சிவராமனுக்கு, பள்ளிக்கூடத்திலேயே சக மாணவன் மீது காதல் உருவாகிறது. இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, வேறு பள்ளிக்கு மாற்றலாகி செல்கிறார்.
பள்ளி முடிந்து கல்லூரி வாழ்க்கைக்கு செல்லும் அஞ்சலி, அங்கு சக மாணவருடன் கட்டில் வரை காதல் லீலை புரிகிறார். ஒரு கட்டத்தில் காதலில் இருந்து காதலன் விலக நினைக்க அஞ்சலி பரிதவித்துப் போகிறார். விரக்தியின் உச்சத்துக்கே செல்கிறார். இறுதியில் என்ன ஆனது? அஞ்சலியின் காதல் கைக்கூடியதா? என்பதே மீதி கதை.
காதல், மோதல், ஏமாற்றம், வலி என பல பரிமாணங்களில் நடிப்பை வெளிப்படுத்தி அசர வைக்கிறார் அஞ்சலி சிவராமன். பருவ வேகத்தை கண்களிலேயே உணர்த்தி சிலிர்க்கவும் வைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைக்கு வந்துள்ள சாந்திபிரியா பொறுப்பான அம்மாவாக நடித்துள்ளார்.
ஹிருது ஹாரூண், டீஜே, சரண்யா ரவிச்சந்திரன், சஷாங்க் பொம்மிரெட்டிப்பல்லி, ஸ்ரீராம், பார்வதி பாலகிருஷ்ணன், கோகுல் உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறைவில்லை. ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்தை தாங்கி பிடித்து இருக்கிறது. அமித் திரிவேதியின் இசை வலு சேர்க்கிறது.
யூகிக்க முடியாத, எதார்த்தம் நிறைந்த காட்சிகள் படத்துக்கு பலம். மெதுவாக நகரும் திரைக்கதை பலவீனம். காதல் என்ற பெயரில் வரும் பருவ கோளாறை நியாயப்படுத்துவதா? எல்லா பெற்றோரும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? சுதந்திரம் என்ற பெயரில் எல்லாவற்றையும் நியாயப்படுத்தலாமா?
சர்ச்சைக்குரிய கதைக்களமாக இருந்தாலும், தைரியமான படைப்பைக் கொடுத்து பேச வைத்திருக்கிறார் இயக்குனர் வர்ஷா பரத்.
பேட் கேர்ள் - ரொம்பவே....