யாருடைய ஈகோ வென்றது? - ''ஆண்பாவம் பொல்லாதது''- சினிமா விமர்சனம்

கலகலப்பும், எமோஷனலும் சரிவிகிதத்தில் கொடுத்து கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார், ரியோராஜ்.
சென்னை,
ஐ.டி. ஊழியரான ரியோ ராஜும், முற்போக்கு சிந்தனை கொண்ட மாளவிகா மனோஜும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள்.
ஜாலியாக செல்லும் இவர்களது வாழ்வில், திடீரென சின்ன சின்ன பிரச்சினைகள் முளைக்கின்றன. சண்டைகள் வெடிக்கின்றன. எதிர்பாராத ஒரு சண்டையில் மாளவிகா மனோஜின் கரு கலைந்து போகிறது.
விரக்தியில் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு செல்கிறார் மாளவிகா மனோஜ். விவாகரத்து தரமாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கிறார், ரியோராஜ். இருவரையும் சேர்த்து வைக்க ஒரு கூட்டமும், பிரித்து வைக்க ஒரு கூட்டமும் போராடுகிறது.
நீதிமன்றத்தில் நடந்தது என்ன? விவாகரத்து கிடைத்ததா, இல்லையா? யாருடைய ஈகோ வெற்றிபெற்றது? என்பதே கலகலப்பு நிறைந்த மீதி கதை.
கலகலப்பும், எமோஷனலும் சரிவிகிதத்தில் கொடுத்து கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார், ரியோராஜ். ஆண்களுக்கு ஆதரவாக பேசும் இடங்களில் 'நம்ம வேதனையை சரியா சொல்றான்பா...' என்று பலரின் ஆதரவை அள்ளுகிறார். இனி கதை தேர்வில் ஜாக்கிரதை தேவை ரியோ...
ரியோவுக்கு சற்றும் சளைக்காமல் நடிப்பில் அசத்தியுள்ளார், மாளவிகா மனோஜ். 'ரீல்ஸ்' மோகத்தில் அவர் செய்யும் சேட்டைகள் ரசிக்க வைக்கிறது. ஓரிரு காட்சிகள் இலைமறை காயாக இளசுகளை பரவசமாக்குகிறார். 'மேக்கப்' இல்லாத முகத்திலும் வசீகரம்.
வக்கீல்களாக வரும் விக்னேஷ்காந்த், ஷீலாவின் 'போட்டி' நடிப்பு ரசிப்பு. ஜென்சன் திவாகரின் நகைச்சுவை சிரிப்புக்கு 'கியாரண்டி'. வழக்கம்போல 'போதை'யில் அவர் செய்யும் 'லூட்டி'கள் கலகலப்பு.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சித்துகுமாரின் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது.
கலகலப்பான காட்சிகள் பலம். கணவனிடம் சிகரெட் வாங்கி அடிப்பது, பீர் அடிப்பது போன்ற காட்சிகள் தேவையா? கோர்ட்டில் நடக்கும் காட்சிகளில் 'எமோஷனல்' எடுபடவில்லை. யூகிக்க முடிந்த காட்சிகளும் எதிர்பார்ப்பை குறைக்கின்றன.
போலி பெண்ணியம் பேசி பண்பாட்டை கேலி செய்யும் 'மாடர்ன்' மகாதேவிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் வேளையில், ஆண்களின் பக்கம் இருக்கும் நியாயங்களையும் எடுத்துரைத்து கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் கலையரசன் தங்கவேல்.
ஆண்பாவம் பொல்லாதது - கொஞ்சம் புரிஞ்சுகோங்கம்மா...






