நடிகையின் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்த இளைஞர்கள்- படப்பிடிப்பில் பரபரப்பு


நடிகையின் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்த இளைஞர்கள்- படப்பிடிப்பில் பரபரப்பு
x

இரவின் விழிகள் படப்பிடிப்பின் போது நடிகை நீமா ரேவின் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்த இளைஞர்கள்.

சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இரவின் விழிகள். மகேந்திரா பிலிம் பேக்டரி மகேந்திரன் படத்தை தயாரித்து வருகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான ‘பிங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், ஆண்சி, சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் சமூக வலைத்தளங்களை வைத்து வித்தியாசமான கதை அம்சத்துடன் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு வெள்ளிமலை பகுதியில் நடைபெற்று வந்தபோது அந்தப் பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த சில இளைஞர்கள் படப்பிடிப்புத் தளத்தில் அத்துமீறி படத்தின் கதாநாயகி நீமா ரேவை கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்ய முற்பட்டனர். இயக்குநர் சிக்கல் ராஜேஷ் அவர்களை பொறுமையாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

பின்னர் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ஒரு சில விஜய் ரசிகர்கள் உதவியோடு படப்பிடிப்பிற்காக வைத்திருந்த சாட்டையை எடுத்து சுழற்றிய பிறகே அந்த ரோமியோக்கள் ஆளைவிட்டால் போதும் என தலை தெறிக்க ஓடினார்களாம். இந்த நிகழ்வால் கதாநாயகி நீமா ரே ரொம்பவே பயந்துபோய் விட்டாராம்.

அதேபோல அன்றைய தினம் இரவே ‘வாடா கருப்பா’ என்கிற ஆக்ரோஷமான பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இந்த பாடல் ஏற்படுத்திய அதிர்வில் அந்த பகுதியில் இருந்த பெண்கள் சிலருக்கு இயல்பாகவே சாமி வந்து ஆடத் தொடங்கி விட்டனர். காலையில் நடந்த சம்பவத்திலேயே அதிர்ந்து போயிருந்த நாயகி நீமா ரே, இதை பார்த்து இன்னும் மிரண்டு போனாராம். அதன் பிறகு அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தியதில் மறுநாள் படப்பிடிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு மாறினாராம் நீமா ரே.

1 More update

Next Story