''யாதும் அறியான்'' படம் எப்படி இருக்கிறது? - சினிமா விமர்சனம்

எதார்த்தமும், திருப்பங்களும் கொண்ட திரில்லர் கதையில், விஜய்யின் அரசியலையும் புகுத்தி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார், இயக்குனர் எம்.கோபி.
சென்னை,
திருநெல்வேலியை சேர்ந்த தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ''யாதும் அறியான்'' . சினிமா ஆசையில் சுற்றும் தினேசும், பிரணாவும் காதலிக்கிறார்கள். அதேபோல தினேசின் நண்பர் ஆனந்த்பாண்டியும், ஷியாமள் என்ற பெண்ணும் காதலிக்கிறார்கள்.
பிரணாவின் பிறந்தநாளையொட்டி, 4 பேரும் சுற்றுலா செல்கிறார்கள். ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குகிறார்கள்.
தினேஷ்-பிரணா ஜோடி 'இன்ப' மயக்கத்தில் மூழ்கி இருக்கும்போது, பிரணா இறந்து போகிறார். இதனைத்தொடர்ந்து நடக்கும் மோதலில் ஆனந்த் பாண்டி, ஷியாமள் ஆகியோரை அடுத்தடுத்து கொலை செய்கிறார் தினேஷ்.
மூன்று பேரின் உடல்களையும் அப்புறப்படுத்திவிட்டு காலண்டரை பார்க்கும் தினேசுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. அது என்ன? தினேஷ் ஏன் கொலை செய்தார்? இதன் பின்னணியில் உள்ள மர்மம்தான் என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
அறிமுக படத்திலேயே அழுத்தமான நடிப்பை கொடுத்து கவனம் ஈர்க்கிறார், தினேஷ். அப்பாவித்தனமான நடிப்பு, பின்னர் குரூர சிரிப்பு என அவர் செய்யும் அட்டகாசங்கள் 'திகில்' ரகம். அழுகை காட்சிகளில் கவனம் தேவை.
தினேசின் நண்பராக வரும் ஆனந்த்பாண்டி, எதார்த்த நடிப்பால் அசத்துகிறார். இயல்பான நடிப்பால் பிரணா கவர்கிறார். தோன்றும் காட்சிகளில் எல்லாம் தொடை அழகை காட்டி ரசிக்க வைக்கிறார், ஷியாமள்.
தம்பி ராமைய்யா, அப்புக்குட்டி, சேக் உள்ளிட்டோரும் கொடுத்த கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். எல்.டி. ஒளிப்பதிவும், தர்மபிரகாஷ் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. பின்னணி இசையில் 'இரைச்சல்' வேண்டாமே...
யூகிக்க முடியாத காட்சிகள் பலம். வலுவில்லாத திரைக்கதை பலவீனம். படத்தின் ஆரம்பத்தில் வரும் கொலை எதற்கு? இதுதான் முடிவு என்று கூறிவிட்டு, மீண்டும் குழப்பம் ஏற்படுத்துவது சரியா?
எதார்த்தமும், திருப்பங்களும் கொண்ட திரில்லர் கதையில், விஜய்யின் அரசியலையும் புகுத்தி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார், இயக்குனர் எம்.கோபி.