'தெலுங்கு சரளமாக பேசுவேன், ஆனால் தமிழ் மிகவும் கடினம்' - 'சர்தார் 2' பட நடிகை

கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான 'பட்டத்து அரசன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆஷிகா ரங்கநாத்.
சென்னை,
கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாத். இவர் கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கிரேசி பாய்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
சமீபத்தில், சித்தார்த்துடன் 'மிஸ் யூ' படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் தமிழில் கார்த்தியுடன் 'சர்தார் 2', தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஷ்வம்பரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பல மொழிகளில் பணிபுரிவது தன்னை வலிமையாகவும், அர்ப்பணிப்புடன் இருக்கவும் உதவியுள்ளதாக அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், 'தற்போது எனக்கு தமிழ் புரியும். ஆனால், அதை கற்றுக்கொள்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நான் தும்கூரைச் சேர்ந்தவள், என் தாய்மொழி கன்னடம். எனக்கு தமிழிலோ, தெலுங்கிலோ பேசும் நண்பர்கள் இல்லை. ஆனால், நான் தெலுங்கு திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்ததால் தெலுங்கு சரளமாக பேசுவேன்.
பல மொழிகளை கற்றுக்கொள்வது நடிகையை விட ஒரு நபராக எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அது என்னை வலிமையாகவும், அர்ப்பணிப்புடன் இருக்கவும் உதவியுள்ளது ' என்றார்.