“ப்ரண்ட்ஸ்” படத்தின் 2-ம் பாகத்திற்கு திட்டமிட்டிருந்தோம் - நடிகர் ரமேஷ் கண்ணா

விஜய், சூர்யா, வடிவேலு நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் நவம்பர் 21 ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் ‘ப்ரண்ட்ஸ்’ . மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு, நட்பின் ஆழமான கதைக்களமும், அதிரடியான நகைச்சுவையும் தான் முக்கியக் காரணம். ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தின் கதை, மூன்று நண்பர்களின் ஆழமான பாசம், காதல் மற்றும் குடும்பப் பிணைப்புகளை மையமாகக் கொண்டது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
‘ப்ரண்ட்ஸ்' படத்தை மீண்டும் வருகிற 21-ந் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படம் மீண்டும் 4-கே டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடித்த ரமேஷ் கண்ணா அளித்த பேட்டியில், "மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘ப்ரண்ட்ஸ்' படத்தின் இயக்குனர், இப்போது நம்முடன் இல்லாதது பெரிய இழப்பு. 25 ஆண்டுக்குப் பின் மீண்டும் படம் ரீ-ரிலீஸ் ஆவதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை எடுக்கும் போது அனைவரும் ஜாலியாக நடித்துக் கொடுத்தோம். கடிகாரம் உடையும் காட்சியை எல்லாம் எடுக்கவே முடியவில்லை. ஒரு முறை கடிகாரம் உடைந்தால் அதை சரி செய்ய சுமார் 1 மணி நேரம் ஆகும். யாராவது சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தால், மீண்டும் ரீ-டேக் ஆகும். அந்த காட்சியில் விஜய், சூர்யா எல்லாம் திரும்பி நின்று சிரித்ததை படத்தில் பார்க்க முடியும். ‘ப்ரண்ட்ஸ்' படத்தின் 2-ம் பாகத்தை எடுப்பதற்கான திட்டங்கள் வைத்திருந்தோம். அதுபற்றி இயக்குனர் சித்திக்கிடம் கூட பேசினேன். ஆனால் பல காரணங்களால் அது நடக்கவே இல்லை" என்றார்.
முன்னதாக, தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில், ‘ப்ரண்ட்ஸ்’ படமும் வெளியாக உள்ளதாக ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். விஜய் நடிப்பில் ரீ-ரிலீஸான ‘கில்லி’ திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வரை வசூல்செய்ததாகக் கூறப்படுகிறது.
‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் டிரெய்லர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது.






