நடிகை சிருஷ்டியை “திருஷ்டி” என்று சீண்டிய விமல்

விமல், யோகிபாபு நடித்துள்ள ‘மகாசேனா’ படம் வரும் 12-ந்தேதி வெளியாகிறது.
'பசங்க' படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விமல். இவரது நடிப்பில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது வடம் படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘மகாசேனா’. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘மகாசேனா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது கதை வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் டிசம்பர் 12-ந்தேதி வெளியாகிறது.
சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சிருஷ்டி டாங்கே பேசும்போது, “பொதுவாக மேடைகளில் நடிகர்-நடிகைகளை பற்றி மட்டுமே பேசுவார்கள். ஆனால் நான் இப்படத்தின் இயக்குனர் பற்றி பேசியே ஆகவேண்டும். அவர் தனது பெரிய கனவை, சிறிய ‘பட்ஜெட்டில்' படமாக எடுத்துள்ளார். பொதுவாக சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்கள் தாக்குப்பிடிப்பது கடினம். ஆனால் இந்த படம் ஒரு புதிய மேஜிக்கை செய்து, மற்ற சிறிய படங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
அதனைதொடர்ந்து விமல் பேசுகையில், மேடையில் இருந்த அனைவரையும் பெயரை சொல்லி வாழ்த்தி வரவேற்றார். அப்போது சிருஷ்டி டாங்கேவை, ‘திருஷ்டி' என்று அழைத்தார்.பின்னர் சுதாரித்துக்கொண்டு “சிருஷ்டி உங்களுக்கு எடுக்கவேண்டும் திருஷ்டி. உங்களுக்கு பட்டுவிடும் திருஷ்டி', என்று சொல்ல வந்தேன்” என்று கூறி சமாளித்தார். விமலின் இந்த நகைச்சுவையான சீண்டலை சிருஷ்டி டாங்கேவும் சிரித்தபடி ரசித்தார். இது பட விழாவை கலகலப்பாக்கியது.






