வீர வணக்கம்: சினிமா விமர்சனம்

அனில் வி.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, பரத் நடித்துள்ள ‘வீர வணக்கம்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவரும், முதல் புரட்சி வீரருமான பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறை எடுத்து சொல்லும் படம்.
தமிழகத்தில் வசிக்கும் செல்வந்தரான பரத், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியாக இருக்கிறார். ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அதேவேளை, பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சினைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்கிறார். ஒருகட்டத்தில் அந்த மக்களுக்கு போராட்ட உணர்வை ஏற்படுத்த வழிதேடுகிறார். இதையடுத்து அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார். அப்போது 96 வயதுள்ள பெண் கம்யூனிச போராளியான பி.கே.மேதினி, புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறை எடுத்து சொல்கிறார். கேரளாவில் கம்யூனிச புரட்சி உருவாகி, விஸ்வரூபம் எடுத்தது எப்படி? என்பதை சொல்கிறார். அதன்பிறகு என்ன ஆனது? மக்களின் மனதில் போராட்ட தீ பரவியதா? என்பதே மீதி கதை.
பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, அந்த கதாபாத்திரத்துக்கே புத்துயிரை கொடுத்திருக்கிறார். அவரது புரட்சிகரமான வசனங்கள் சிலிர்க்க வைக்கிறது. அவரது போராட்ட பாணி வியப்பளிக்கிறது. பணக்கார கம்யூனிசவாதி கதாபாத்திரத்தில் பரத் அசத்தியுள்ளார். வயதுக்கு மீறிய கதாபாத்திரத்திலும் ஸ்கோர் செய்துள்ளார்.
கம்யூனிச போராளியாக நடித்திருக்கும் ரித்தேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, அதர்ஷ், ஆய்ஷ்விகா என அனைவருமே கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர். உண்மையான போராளியான மேதினி அம்மாள் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி ஆச்சரியம் தருகிறார்.
கவியரசுவின் ஒளிப்பதிவும், எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரது இசையும் படத்துடன் ஒன்ற செய்கிறது. உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்துக்கு பலம். அதேவேளை நாடகத்தனம் ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறது.
சுதந்திர போராட்டம் ஒருபக்கம் இருந்தாலும், இந்திய கிராமங்களில் தனி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்த ஜமீன்கள் மற்றும் நில சுவாந்தர்கள் மூலம் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட விவசாய தொழிலாளர்களை மீட்டு, புதிய மக்கள் புரட்சியை கம்யூனிசம் எப்படி உருவாக்கியது? என்பதை அழுத்தமாக சொல்லி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் அனில் வி.நாகேந்திரன்.
வீர வணக்கம் - இடி முழக்கம்.