சிம்பு ரசிகர்களின் நம்பிக்கையே “மாநாடு” வெற்றிக்கு காரணம் - சுரேஷ் காமாட்சி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த “மாநாடு” படம் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார்.

இந்நிலையில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு, எஸ்டிஆருக்கு, இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது ‘மாநாடு’ படத்தின் மீது. கோவிட் தாமதம் மற்ற தாமதங்கள் நிகழ்ந்தபோதும் அந்தப் படத்திற்கு ஒரு பாஸிட்டிவிட்டி இருந்துகொண்டே இருந்தது. வெளியிலிருந்தும், படத்தின் குழுவிலிருந்தும் நம்பிக்கை பரவிக்கொண்டே இருந்தது. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சண்டைப்பயிற்சி, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, லைட் மேன்ஸ், தயாரிப்பு நிர்வாகம் செய்த அனைவரும் தந்த உண்மையான உழைப்பே மாபெரும் வெற்றிக்குக் காரணம். நான்கு வருடங்கள் தொட்டாலும் இந்த நிஜமான வெற்றி இன்னும் இனிக்கிறது. எஸ்டிஆரின் ரசிகர்கள் வைத்த நம்பிக்கை வெற்றிக்கு வித்திட்டது. உடன் நின்ற பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்.







