“மிடில் கிளாஸ்” படத்தில் திரைக்கதைதான் ஹீரோ - முனீஸ்காந்த்

நான் வில்லனாக நடிக்க ஆசைப்பட்டு தான் திரைத்துறைக்கு வந்தேன் என்று முனீஸ்காந்த் கூறியுள்ளார்.
சென்னை,
‘சூது கவ்வும்', ‘முண்டாசுப்பட்டி', ‘ஜிகர்தண்டா', ‘டார்லிங்-2', ‘மாநகரம்', ‘டிடி ரிட்டன்ஸ்', ‘கேங்கர்ஸ்' போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் தற்போது 'மிடில் கிளாஸ்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், திருச்சியில் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தை காண வந்த ரசிகர்களை சந்தித்து கதாநாயகன் முனீஸ்காந்த், இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் உரையாடினர்.
செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இயக்குநர், “ பல முக்கிய திரைப்பட விமர்சகர்கள் எங்கள் திரைப்படத்தை விமர்சனம் செய்யாமல் புறக்கணித்துள்ளனர். நல்ல படத்தை விமர்சனம் செய்தால் அவர்கள் பார்வையாளர்கள் குறைகிறார்கள் என்பதால் அவர்கள் எங்களை புறக்கணிக்கிறார்கள். எனது அடுத்த திரைப்படத்தில் முனீஸ் காந்த்திற்கு கதாநாயகனுக்கு இணையான ஒரு கதாபாத்திரம் கொடுத்து அவரையும் நடிக்க வைப்பேன்” என்றார்.
நடிகர் முனீஸ்காந்த், "மிடில் கிளாஸ் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை ஓ.டி.டி-யில் பார்த்துக் கொள்ளலாம் என இருந்துவிடாமல் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பாருங்கள். நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பேன். திரைப்படத்திற்கு மதிப்பெண் வழங்குவது வரவேற்கக்கூடியது தான்.
நான் 15 வருடம் போராடி இந்தத் துறைக்கு வந்தேன். நகைச்சுவையாக நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பொதுமக்கள் என்னைப் பார்த்தவுடன் சிரிக்கிறார்கள். நான் வில்லனாக நடிக்க ஆசைப்பட்டு தான் வந்தேன். இந்தத் திரைப்படத்தில் நான் ஹீரோ கிடையாது. திரைக்கதை தான் ஹீரோ. நடிகை விஜயலட்சுமி, தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் ” என்றார்.






