வீணாப்போன நாலு பேர் செய்த தவறுக்காக மொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது- விஜய் ஆண்டனி

பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான் என்று நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களின் சந்திப்பின் போது பஹல்காம் தாக்குதல் குறித்து பேசினார். அதாவது, "பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் வீணாப்போன நாலு பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை நெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடத்து மனிதத்தை வளர்ப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.