``அது கோழைத்தனம்'' - சின்மயி மன்னிப்பு கேட்ட நிலையில் மோகன் ஜி பரபரப்பு பதிவு

இப்படத்தின் "எம்கோனே" பாடலை சின்மயி பாடி இருந்தார்.
சென்னை,
‘திரௌபதி' படத்தின் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடிக்கிறார்.
இப்படத்தின் "எம்கோனே" பாடல் இன்று மாலை 5.02 மணிக்கு வெளியானது. இதனை சின்மயி பாடி இருந்தார். இதற்கிடையில், பாடியதற்காக சிம்மயிக்கு எதிராக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்புக்கேட்டிருந்தார்.
சின்மயி மன்னிப்பு கேட்ட நிலையில் மோகன் ஜி பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``என்னுடன் திரௌபதி 2 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறிவைத்து தாக்க வேண்டாம். என் படம் பேசுவது என் சொந்த சிந்தனை. என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைத்து தாக்குவது கோழைத்தனமாகும்'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.






