“தடை அதை உடை” - சினிமா விமர்சனம்

அறிவழகன் முருகேசன் இயக்கத்தில் ‘அங்காடித்தெரு’ மகேஷ் நடித்துள்ள ‘தடை அதை உடை’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சினிமா டைரக்டர் ஆகும் ஆசையில் சுற்றும் குணாபாபு, தனது நண்பர்களுடன் இணைந்து குறும்படம் தயாரிக்கிறார். அந்த குறும்படத்தை சரியில்லை என்று கூறி தயாரிப்பாளர் நிராகரிக்கிறார். சோகத்தில் தனது நண்பர்களுடன் உலா வரும் குணாபாபு, அந்தவழியாக காரில் செல்லும் ஒருவரிடம் லிப்ட் கேட்டு செல்கிறார். அவரிடம் தனது குறும்படத்தின் கதையை சோகத்துடன் சொல்கிறார். அவர் சொல்லும் கதையில் ஆதிக்க வர்க்கத்தினர் ஏகப்பட்ட இடையூறுகளையும், தடைகளையும் தாண்டி ஒரு சிறுவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்கிறான் என்பது போல குறிப்பிடப்படுகிறது.
இன்னொரு கதையில் முதல் கதையில் வந்த கதாபாத்திரங்கள் வேறு மாதிரி சித்தரிக்கப்படுகின்றன. இதில் அங்காடித்தெரு மகேஷ் உள்ளிட்டோர் இடம்பெறுகிறார்கள். 'யூ-டியூப்' மோகத்தால் மக்கள் சந்திக்கும் அவலம் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு கதைகளும் இணையும் இடத்தில் சில திருப்பங்களும் உண்டாகின்றன? அவை என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
பல வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்துள்ள 'அங்காடித்தெரு' மகேஷ் நடிப்பு கவனிக்க வைக்கிறது. தனது அக்காவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு போராடும் இடங்களில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்து உள்ளார்.
குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது உள்ளிட்டோரும் கொடுத்த கதாபாத்திரங்களில் கலக்கி இருக்கிறார்கள். முன்னாள் கவுன்சிலர் நேர்காணல் நிகழ்ச்சி கலகலப்புக்கு கியாரண்டி. தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் ஒளிப்பதிவில் காட்சிகள் பரபரப்பாய் நகருகிறது. சாய் சுந்தர் இசையில் பாடல்கள் ஓரளவு கவனிக்கப்பட்டாலும், பின்னணி இசை 'இன்னும் இருந்திருக்கலாம்' என்ற நிலையே உள்ளது.
சமூக அவலங்களை பட்டவர்த்தனப்படுத்தும் எதார்த்தமான காட்சிகள் படத்துக்கு பலம். நாடகத்தனமாய் நகரும் காட்சிகள் பலவீனம். திரைக்கதையில் நிறைய பிரச்சினைகள் எட்டிப் பார்க்கிறது. முன்னாள் கவுன்சிலரிடம் சட்டமன்றத்தை பற்றிய கேள்விகள் கேட்பது நியாயமா? யூகிக்க முடிந்த காட்சிகளும் லேசான சோர்வை தருகின்றன.
கல்வியின் அருமையை உணர்த்தும் விதமாகவும், சமூக ஊடகங்களின் மயக்கத்தில் மூழ்கிவிடக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாகவும் விழிப்புணர்வு படைப்பாக படத்தை இயக்கி கவனம் ஈர்க்கிறார், இயக்குனர் அறிவழகன் முருகேசன்.
தடை அதை உடை - முயற்சி திருவினையாக்கும்.






