அதிகம் டிரோல் செய்யப்பட்ட முதல் படம் “அஞ்சான்” - லிங்குசாமி

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த ‘அஞ்சான்’ படம் நாளை ரீ-ரிலீஸாகிறது.
சென்னை,
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014- ம் ஆண்டு வெளியான படம் ‘அஞ்சான்’. இத்திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தினை 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கமர்ஷியல் படமாக வெளிவந்த அஞ்சான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆன நிலையில் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. ‘அஞ்சான்’ படத்தின் ரீ-எடிட் வெர்சன் நாளை ரீ-ரிலீஸாகிறது.
இந்த நிலையில், இயக்குநர் லிங்குசாமி, “அஞ்சான் திரைப்படம் 11 ஆண்டுகளுக்கு முன் வெளியானபோது மிகப்பெரிய கேலி, கிண்டல்களைச் சந்தித்தது. இன்று, நிறைய படங்கள் டிரோல் செய்வதற்கு முன்பே அதிகம் டிரோல் ஆன திரைப்படம் ‘அஞ்சான்’தான். ஆனால், நான் சந்தித்த பல ரசிகர்கள் ‘அஞ்சான்’ தங்களுக்குப் பிடித்திருந்ததாகவே சொன்னார்கள்.
மறுபடியும் தோற்பதற்காக வருகிறாயா? என கேட்கின்றனர். இது வெற்றி தோல்விக்காக வெளியிடப்படவில்லை. ‘அஞ்சான்’ ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டது மீண்டும் சவால் விடுவதற்காக அல்ல. வெற்றியும் தோல்வியும் முக்கியமல்ல. உண்மையான சூர்யா ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய திருப்திக்காகவும் ‘அஞ்சான்’ படத்தை ரீ-எடிட் செய்து ரீ-ரிலீஸ் செய்கிறோம். இப்படம் 2 மணி நேரம் ஓடக்கூடிய வடிவமாகத் திரைக்கு வருகிறது” என்றார்.






