"சொட்ட சொட்ட நனையுது" திரைப்பட விமர்சனம்

இயக்குனர் நவீத் எஸ்.பரீத் இயக்கிய "சொட்ட சொட்ட நனையுது" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
வழுக்கை தலையால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே கதை.
இளம் வயதிலேயே வழுக்கை விழுந்துவிட்ட நிஷாந்த் ரூசோவை திருமணம் செய்துகொள்ள பெண்கள் முன்வரவில்லை. வசதி இருந்தும் வழுக்கை தலையால் திருமண வாழ்க்கையில் நுழைய முடியாமல் தவிக்கிறார். இதற்கிடையில் எதிர்வீட்டில் வசிக்கும் வர்ஷிணி அவரை திருமணம் செய்துகொள்ள முன்வருகிறார். திருமண வேலைகளும் ஜோராக நடக்கிறது. விடிந்தால் திருமணம் என்ற சூழலில் திடீரென திருமணத்தை நிறுத்தி விடுகிறார், நிஷாந்த் ரூசோ.
அவர் திருமணத்தை நிறுத்தியது ஏன்? வழுக்கை தலையால் பாதிக்கப்பட்ட அவருக்கு மீண்டும் திருமணம் கைகூடியதா? என்ற கேள்விகளுக்கு பதிலே மீதி கதை.
இளம் வயதிலேயே வழுக்கை தலையுடன் சுற்றுவோரின் வேதனைகளை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார் நிஷாந்த் ரூசோ. ஆனாலும் வழுக்கை விழுவது பெரிய பாவம் போல காட்டியிருக்க வேண்டாம். பீல் பண்ணுவார்கள் இல்லையா....
நாயகிகளாக வர்ஷிணியும், ஷாலினியும் கொடுத்த வேலையைக் குறைவின்றி செய்திருக்கிறார்கள். ரோபோ சங்கர், புகழ், ராஜா, யோகி, வினோத் என காமெடி ஸ்டார்கள் நிறைந்திருந்தும், விழுந்து விழுந்து சிரிக்கும்படியான காட்சிகள் குறைவு.
வழுக்கை தலையே கதைக்களம் என்பதால், அதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ரயீஷ். ரெஞ்சித் உன்னியின் இசை ஓ.கே. ரகம். கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், நடிப்பும் படத்துக்கு பலம். முதல் பாதி போல இரண்டாம் பாதியிலும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். சில காட்சிகள் ஒட்டவில்லை.
வழுக்கைத் தலையுடன் வாழ்வோரின் வலி மிகுந்த வாழ்க்கையை ஜாலியாக சொல்லி காட்சிகளை நகர்த்தி கவனம் ஈர்க்கிறார், இயக்குனர் நவீத் எஸ்.பரீத்.
சொட்ட சொட்ட நனையுது - மனதில் ஒட்ட மறுக்கிறது.