‘சாவு வீடு' படம்: கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது- இயக்குனர் ஆண்டன் அஜித்

ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள ‘சாவு வீடு' படம் விரைவில் திரைக்கு வருகிறது.
சென்னை,
ஆண்டன் அஜித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள புதிய படம், ‘சாவு வீடு'. ‘கைதி', `மாஸ்டர்' படங்களில் நடித்த உதய் தீப், ‘பேட்டை' படத்தில் நடித்த ஆதேஷ்பாலா, ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம், சேஷாத்ரி, ஷியாம் ஜீவா, பவனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ‘பர்ஸ்ட் லுக்'கில் வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் பரபரப்பாய் பேசப்பட்டன.
இதுகுறித்து ஆண்டன் அஜித் கூறுகையில், ‘ஒரு துக்க வீட்டில் நடக்கும் அதிரடி திருப்பமே கதை. கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக அதை சொல்லியுள்ளோம். கதையை எழுதுவதற்கு முன்பே தலைப்பை எழுதிவிட்டேன்.
கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக அதை உணர்வார்கள். விரைவில் படம் திரைக்கு வருகிறது. ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் கிடைப்பது உறுதி'', என்றார்.






