ஓ.டி.டி.யில் வெளியாகும் ராஷ்மிகா மந்தனாவின் 'சாவா' படம்

விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள 'சாவா' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 11-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.