ராப் பாடகர் வேடனின் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

பிரபல ராப் பாடகர் வேடன் திடீர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூடத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் வேடன். இவர் 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில், 'குத்தந்திரம்' பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதன் மூலம் பிரபலமும் ஆன இவர் இப்போது தொடர்ந்து முன்னணி நடிகர் படங்களில் பணியாற்றி வருகிறார். டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் 'வாடா வேடா' என்ற பாடலை வேடன் எழுதி பாடியுள்ளார். மாரி செல்வராஜின் 'பைசன்' திரைப்படத்திலும் 'றெக்க றெக்க' எனும் பாடலை பாடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளையும்நடத்தி வந்தார். நாளை கத்தார் நாட்டில் வேடனின் இசை நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திடீர் உடல் நலக் குறைவால் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு ஏற்பட்ட உடல் பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. கத்தாரில் நாளை நடைபெறவிருந்த அவரது இசை நிகழ்ச்சி டிசம்பர்12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.






