பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

1960ம் ஆண்டு ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ படம் மூலம் பாலிவுட்டில் தர்மேந்திரா அறிமுகமானார்.
பழம்பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா (வயது 89). இவர் இந்தி சினிமா துறையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 2004 முதல் 2009 வரை பாஜக எம்.பி.யாகவும் செயல்பட்டுள்ளார். தர்மேந்திராவிற்கு பிரகாஷ் கவுர் மற்றும் ஹேமமாலினி ஆகிய இரு மனைவிகள் மற்றும் நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல், இஷா தியோல் மற்றும் அஹானா தியோல், அஜீதா மற்றும் விஜேதா என மகன், மகள்கள் இருக்கின்றனர்.
இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று வீட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தர்மேந்திரா மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நண்பர் தர்மேந்திராவுக்கு பிரியாவிடை. உங்களது தங்கமான இதயத்தையும், நாம் பகிர்ந்த சிறப்பான தருணங்களையும் என்றும் எனது நினைவில் வைத்திருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.






