"ஓஹோ எந்தன் பேபி" திரைப்பட விமர்சனம்

கிருஷ்ணகுமார் இயக்கிய "ஓஹோ எந்தன் பேபி" எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
உதவி இயக்குனரான ருத்ரா இயக்குனராகும் ஆசையில் விஷ்ணு விஷால் சந்தித்து கதை சொல்கிறார். இரு கதைகளும் விஷ்ணு விஷாலுக்கு பிடிக்காமல் போக, தனது காதல் வாழ்க்கையையே கதையாக சொல்கிறார் ருத்ரா.
சந்தோஷமாக செல்லும் காதல் வாழ்க்கை, சில மனக்கசப்புகளால் உடைய இருவரும் பிரிந்து விட்டதையே கிளைமாக்ஸ் காட்சியாக சொல்லி முடிக்கிறார் ருத்ரா. ஆனால் விஷ்ணு விஷால், 'இது கிளைமேக்ஸ் கிடையாது. இதுதான் இடைவேளை. நீ உன் காதலியை மீண்டும் சந்தித்து விட்டு இரண்டாம் பாதியை படமாக்கு. கால்ஷீட் தருகிறேன்...' என்கிறார்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் தனது முன்னாள் காதலியை தேடி செல்கிறார் ருத்ரா. அப்போது என்ன நடந்தது? திட்டமிட்டபடி படத்தை எடுத்தார்களா? என்பதே ஜாலியான மீதி கதை.
பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், வேலைக்கு செல்லும் வாலிபர் என அறிமுக படத்திலேயே மூன்று விதமான 'கெட்டப்'களில் நடித்து அசத்தியுள்ளார் ருத்ரா. 'ரொமான்ஸ்' காட்சிகளில் புதுமுகம் போல தெரியவில்லை. அழகாலும், நடிப்பாலும் மிதிலா பால்கர் வசீகரிக்கிறார். தமிழ் சினிமாவுக்கு நல்வரவு.
ஹீரோவாகவே வரும் விஷ்ணு விஷால், சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளியுள்ளார். வாழ்க்கையில் செய்த சில தவறுகளை, 'அனுபவம்' என்ற பெயரில் அவர் சொல்லும் இடம், துணிச்சல். முன்னணி நடிகர்களையும் கலாய்த்து ரசிக்க வைத்துள்ளார்.
'இப்படி ஒரு சித்தப்பா தேவை', என்று நினைக்கும் படியான கதாபாத்திரத்தில் கருணாகரன் அசத்தியிருக்கிறார். மிஷ்கின், கஸ்தூரி, பார்த்தசாரதி, நிர்மல்பிள்ளை என அனைவருமே கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். மிஷ்கின், கிங்ஸ்லி வரும் காட்சிகள் கலகலப்பு.
ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. ஜென்மார்ட்டின் இசையில் இளமை துள்ளலான பாடல்கள் ரசிப்பு.
ஜாலியாக நகரும் திரைக்கதை பலம். இரண்டாம் பாதியில் எதார்த்தம் இல்லாமல் நிறைய சினிமாத்தனம் எட்டிப் பார்க்கிறது. பள்ளி காதலில் இவ்வளவு கவர்ச்சி தேவையா? பெற்றோரின் மனநிலையை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
வழக்கமான காதல் கதை என்றாலும், புதுமையான கதைக்களத்தில் ரசிக்கும்படியாக படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், கிருஷ்ணகுமார் .
ஓஹோ எந்தன் பேபி - இளசுகளுக்கு கொண்டாட்டம்.