முன்னணி நடிகர்களின் சம்பளத்திற்கு புதிய கட்டுப்பாடு - தயாரிப்பாளர் சங்கம்

முன்னணி நடிகர்களின் சம்பளத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மஹாலில் தேனாண்டாள் முரளி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து தயாரிப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக நடிகர் ராதா ரவி, எஸ்.வி சேகர், செந்தில், தேவையானி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சினிமா தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னணி நடிகர்கள் வியாபார பங்கீட்டு முறையில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும், வெப் சீரிஸ்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டுள்ளன.
திரைப்படங்களில் நடித்துக்கொண்டு ஓடிடி வெப் சீரிஸ்களில் நடிக்கும் நடிகர்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னணி நடிகர்கள் பலரும் வியாபார பங்கீட்டு முறையில் நடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களைப் போல், தமிழ் சினிமா முன்னணி நடிகர்களும் வருமான பங்கீட்டு முறையில் படம் நடிக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் லாப, நஷ்டத்தில் நடிகர்களும் பங்கு கொள்ள வேண்டும். ஏனென்றால், இவர்கள் அதிகப்பட்ச ஊதியம் வாங்குவதால் இனிமேல் வியாபார பங்கீட்டு முறையில் மட்டுமே நடிக்க வேண்டும். படங்களில் நடிக்கும் போது சில நடிகர்கள் ஓடிடி வெப் சீரியஸ்களில் நடிப்பதால், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட் பாதிக்கப்படுகிறது எனவும், இதனாலேயே மேற்கண்ட கட்டுப்பாடு விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.






