தமிழில் அறிமுகமாகும் மிஸ் இந்தியா அழகி

நடிகை சுமன் ராவ் 'தெய்வா' என்ற தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சென்னை,
ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர், சுமன் ராவ். மேவாரி மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர், 2019-ம் ஆண்டின் 'பெமினா மிஸ் ராஜஸ்தான்', 'பெமினா மிஸ் இந்தியா', 'மிஸ் வேர்ல்டு ஆசியா' ஆகிய அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றிருக்கிறார். அதே ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் 2-வது ரன்னர் அப் ஆகவும் வந்திருக்கிறார்.
இவர் 'தி கெய்ஸ்ட்' என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானார். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் 'தெய்வா' என்ற தமிழ் படத்தில் நடிக்க சுமன் ராவ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படம் மிக விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் பவன், மகாலட்சுமி சுதர்சன், விக்னேஷ் ஆதித்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை பால சுப்பிரமணியம், சாந்தகுமார் சந்திரமோகன் ஆகிய இருவர் இணைந்து இயக்குகிறார்கள்.
இந்தப் படத்தில் சுமன் ராவ் நடிக்கும் அன்பரசி என்ற கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுமரன்ராவ், "உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்பதற்கு அன்பரசி மிகவும் ஆவலாக இருக்கிறாள்" என்று பதிவிட்டுள்ளார்.