“மெஸன்ஜர்” - சினிமா விமர்சனம்


“மெஸன்ஜர்” - சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 31 Oct 2025 4:54 PM IST (Updated: 31 Oct 2025 6:04 PM IST)
t-max-icont-min-icon

ரமேஷ் இளங்காமணி இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடித்துள்ள ‘மெஸன்ஜர்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

காதலில் தோல்வி கண்ட ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை முடிவை கையில் எடுக்கிறார். அப்போது அவரது பேஸ்புக் மெஸேஞ்சருக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதில், 'தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருப்பார்கள்' என்ற செய்தி இருக்கிறது. இதையடுத்து தற்கொலை முயற்சியை கைவிடும் ஸ்ரீராம் கார்த்திக், தனக்கு மெசேஜ் அனுப்பிய பெண்ணை தேடுகிறார். இந்த தேடுதல் வேட்டை, மெசேஜ் அனுப்பிய பெண் 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார் என்பதை அறிந்து அதிர்ந்து போகிறார். இறந்தவர் எப்படி மெசேஜ் அனுப்ப முடியும்? என்று குழம்புகிறார். மெசேஜ் அனுப்பிய அந்த பெண்மணி யார்? இறந்தவர் எப்படி மெசேஜ் அனுப்ப முடியும்? என்னதான் நடந்தது? என்பதே பரபரப்பான மீதி கதை.

தனது கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்த்து நடித்திருக்கிறார் ஸ்ரீராம் கார்த்திக். மெசேஜ் அனுப்பிய பெண்ணை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது. மனிஷாஸ்ரீ, அழகான நடிப்பால் கவர்ந்து இருக்கிறார். முத்தக்காட்சியிலும் கிளுகிளுப்பு ஏற்றுகிறார்.

கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற முகத்தோடும், எதிர்பார்ப்புகளோடும் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார், பாத்திமா. வைஷாலி ரவிச்சந்திரன், ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ஆகியோரின் அனுபவ நடிப்பும் படத்தின் ஓட்டத்துக்கு உதவி இருக்கிறது. பாலகணேசனின் ஒளிப்பதிவுக்கும், அபுபக்கர் இசையும் கைகொடுத்திருக்கிறது. பின்னணி இசையும் ஓகே ரகம்.

வித்தியாசமான சிந்தனை மற்றும் விபரீதமான காட்சியமைப்புகள் இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் சுவாரசியம் கூட்டி இருக்கலாம். இரண்டாம் பாதியில் கதை தடம் மாறிவிட்டது. திரைக்கதையிலும் வேகம் குறைகிறது.

எத்தனையோ காதல் கதைகள் வரும் சூழலில், யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு காதல் கதையை சொல்லி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி.

மெஸஞ்சர் - அலர்ட்

1 More update

Next Story