விமான சேவை ரத்து: பிரபல நடிகை கண்டனம்

விமான சேவை ரத்து பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதை மக்களுக்கு இண்டிகோ தெரிவிக்க வேண்டும் என்று மெஹ்ரின் பிர்சாடா கூறியுள்ளார்.
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு தாண்டி தற்போது சென்னை, கோவையிலும் விமான சேவை ரத்தாகி வருகின்றது.சமீபத்தில் அறிமுகப்படுத்திய விமான ஊழியர்களுக்கான பணி நேர வரம்பு விதிமுறை தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் இண்டிகோ விமான சேவை ரத்தாகும் விவகாரத்தில் பிரபல நடிகை மெஹ்ரின் பிர்சாடா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் “இதை ஏற்கவே முடியாது. இண்டிகோ இணையத்திலும், செயலியிலும் விமானம் சரியான நேரத்தில் இயக்கப்படும் என்று சொல்லிவிட்டு, திடீரென ரத்து செய்வதை எப்படி சொல்ல? தவிர்க்க முடியாத காரணங்களால் விமான சேவை ரத்தாவது பெரிய விஷயமல்ல. ஆனால் இங்கு நடந்திருப்பது அலட்சியம் தான். என்ன நடந்தது? பிரச்சினைக்கு என்ன காரணம்? என்பதை பொதுமக்களுக்கு இண்டிகோ நிறுவனம் தெரிவிப்பதுடன், பயணிகளின் அசவுகரியத்தை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்..
இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த மெஹ்ரின் பிர்சாடா ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ‘நோட்டா’, தனுஷ் ஜோடியாக ‘பட்டாஸ்’ திரைப்படங்களில் நடித்தவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு `இந்திரா' படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார்.






