8 நாட்களில் ரூ 61 கோடி வசூலித்த "மகாவதாரம் நரசிம்மா"

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் ‘மகாவதாரம் நரசிம்மா’ அனிமேஷன் படத்தின் வசூல் ரூ.61 கோடியைத் தாண்டியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
கேஜிஎப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் குறைந்த செலவில் பிரமாண்ட படங்களை தயாரிப்பதில் தனித்துவம் பெற்றது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள 'மகாவதாரம் நரசிம்மா' படம் இரண்ய கசிபு என்ற அரக்கன், அவனது மகன் பிரகலாதன், விஷ்ணுவை மையமாக வைத்து புராண திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் கிளீம் புரொடக்சன்ஸ் ஆகியவை 'மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்'-ன் கீழ் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் படங்களை தயாரிக்கின்றன. அதன்படி, மகாவதார் பரசுராம் (2027 ), மகாவதார் ரகுநந்தன் (2029 ), மகாவதார் துவாரகாதீஷ் (2031), மகாவதார் கோகுல நந்தா (2033 ), மகாவதார் கல்கி பார்ட் ஒன் (2035 ), மகாவதார் கல்கி பார்ட் 2 (2037) ஆகிய வரிசையில் படங்களை வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் 8 நாட்களில் ரூ.61 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதே பாணியில் பல படங்களை தயாரிக்க ஹொம்பாலே பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.