"கிங்டம்" திரைப்பட விமர்சனம்

கவுதம் நின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
ஆந்திராவின் கடற்கரை பகுதிகளில் இருந்து தங்கத்துக்காக அடித்து விரட்டப்பட்ட மக்கள் கூட்டம் இலங்கையில் தஞ்சம் அடைகிறது. தங்களைக் காப்பாற்ற ஒரு அரசன் வருவான் என்று நம்பி காத்திருக்கிறது. இதற்கிடையில் போலீஸ் காரரான விஜய் தேவரகொண்டாவை, இலங்கையில் நடமாடும் ஒரு மாபியா கும்பலை உளவு பார்க்க சொல்லி ரகசியமாக அனுப்பி வைக்கிறது காவல்துறை. ஒரு கட்டத்தில் மாபியா கும்பலின் தலைவன் தனது சொந்த அண்ணன் என்பது விஜய் தேவரகொண்டாவுக்கு தெரிய வருகிறது.
ஆனாலும் ஒரு கைதி போல இலங்கைக்கு செல்லும் விஜய் தேவரகொண்டா, அங்கு சூழ்நிலை கைதியாக மக்கள் வாழ்வதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். மாபியா கும்பலில் கொட்டத்தை விஜய் தேவரகொண்டா அடக்கினாரா? அதேவேளை போலீசாரிடமிருந்து தன் அண்ணனை காப்பாற்றினாரா? அடிமைப்பட்டு கிடந்த மக்களின் கதி தான் என்ன? என்பது பரபரப்பான மீதி கதை.
முழு படத்தையும் தோளில் சுமந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. மாபியா கும்பலின் சதி வேலைகளை கண்டுபிடிக்கும் இடங்கள் 'திரில்'. அழகான கதாநாயகியான பாக்யஸ்ரீ போர்சை, பெயருக்கு என்று இணைத்துள்ளார்கள். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒட்டவில்லை.
மாபியா தலைவனான சத்யதேவ், தன் பங்குக்கு நிறைவான நடிப்பை கொடுத்திருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் பாச மழையில் நனைய முடியவில்லை. வில்லனாக வரும் வெங்கிடேஷ் நடிப்பு கவனிக்கு வைக்கிறது. கேசவ் தீபக், கவுஷிக் மகதா, அவினாஷ் உள்ளிட்டோரின் நடிப்பிலும் எதார்த்தம் தெரிகிறது.
ஜோமோன் டி ஜான், கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், அனிருத் இசையும் ஓகே ரகம். தங்கம் கடத்துதல் போன்ற பரபரப்பான காட்சிகள் படத்தில் இருந்தாலும், திரைக்கதையில் இருக்கும் தொய்வு சலிப்பை தருகிறது. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளை குறைத்து இருக்கலாம். படத்தின் நீளமும் ஜாஸ்தி....
பரபரப்பாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், லாஜிக் பற்றியெல்லாமல் கவலை இல்லாமல் படத்தை இயக்கியுள்ளார் கவுதம் நின்னனூரி.
கிங்டம் - ஓவர் பில்டப்.