கார்த்தியின் “வா வாத்தியார்” படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு


கார்த்தியின் “வா வாத்தியார்” படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு
x

நடிகர் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான ‘வா வாத்தியார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இயக்குனர் நலன் குமாரசாமி, "சூது கவ்வும், காதலும் கடந்து போகும்" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ‘வா வாத்தியார்’ படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டில் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தங்களிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் ரூ.10 கோடியே 35 லட்சம் கடன் பெற்றது. இந்த தொகையை செலுத்தம் வரை படத்திற்கு தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருந்து சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. பின், டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன்கள் நடைபெற்று வந்தன.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், கடன் தொகையில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே படத்தின் மீதான தடையை நீக்க முடியும் என்று எச்சரித்தது. ஆனால், படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ரூ.3 கோடியே 75 லட்சம் மட்டுமே செலுத்த முடியும் என்று வாதிடப்பட்டது. இதை ஏற்காத ஐகோர்ட், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

1 More update

Next Story