முதல் படம் இன்று வெளியாகும் நிலையில் கன்னட நடிகர் கைது

துணை நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றிய புகாரின் பேரில் நடிகர் மடனூரு மனு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
கன்னட தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் 'காமெடி கில்லாடி' நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் மடனூரு மனு. இவர், தற்போது கதாநாயகனாக 'குலதள்ளி கீல்யவுதே' என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். அந்த படம் இன்று மாநிலம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்தநிலையில், பெங்களூரு அன்னபூர்ணேஷ்வரிநகர் போலீஸ் நிலையத்தில் நடிகர் மடனூரு மனு மீது துணை நடிகை ஒருவர் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த 2018-ம் ஆண்டு 'காமெடி கில்லாடி' நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, எனக்கும் நடிகர் மடனூரு மனுவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2022-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி 'காமெடி கில்லாடி' நிகழ்ச்சிக்காக என்னை சிவமொக்காவுக்கு அழைத்து சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின்பு எனது அறைக்கு வந்த மடனூரு மனு என்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துவிட்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி கட்டாயப்படுத்தி எனக்கு தாலி கட்டினார்.
அதன்பிறகு, தொடர்ந்து என்னை பலாத்காரம் செய்து வந்தார். இதனால் 2 முறை நான் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலால் கர்ப்பத்தை கலைத்தேன். என்னை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுக்கிறார்' என்று கூறியிருந்தார். அதன்பேரில், போலீசார் நடிகர் மடனூரு மனு மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்து, ஹாசன் மாவட்டத்தில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.