ஏவிஎம் சரவணன் மறைவுக்கு கமல் இரங்கல்


ஏவிஎம் சரவணன் மறைவுக்கு கமல் இரங்கல்
x
தினத்தந்தி 4 Dec 2025 10:22 PM IST (Updated: 4 Dec 2025 10:24 PM IST)
t-max-icont-min-icon

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய திரையுலகில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம். இதனை தொடங்கிய ஏ.வி. மெய்யப்பன் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். இவரது மகனான ஏவிஎம் சரவணன் தந்தைபோலவே முக்கிய திரைப்படங்களை தயாரித்துள்ளார். 1958ஆம் ஆண்டு முதல் ஏவிஎம்மிற்கு தலைமையேற்று திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஏவிஎம் சரவணன், ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர். இன்று மாலை அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு அண்ணன் - தம்பி உறவு போன்றது. குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாக நான் உரிமை கொண்டாடுகிறேன். நான் தனி மரம் அல்ல. ஏவிஎம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி. இன்று வளர்ந்து வந்திருக்கிறேன். இந்த தோப்பில் பல ஆசான்கள் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி இது” என்று பேசியுள்ளார்.

1 More update

Next Story