50 ஆண்டுகளாக ஹீரோவாக நடிப்பது ஆசிர்வாதம் - நடிகர் பாலையா

போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்துள்ள ‘அகண்டா 2’ படம் நாளை வெளியாகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘அகண்டா’ படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
போயபதி ஸ்ரீனு இயக்கும் இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில், ஆதி பினிசெட்டி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது. இப்படம் பல மொழிகளில் நாளை வெளியாக உள்ளது.
சென்னையில் நடந்த பட விழாவில் பாலகிருஷ்ணா பேசுகையில், “சென்னைக்கு வரும்போது சொந்த வீட்டுக்கு வருவது போல இருக்கிறது. ஏனெனில் இங்குதான் நான் பிறந்தேன். சென்னை எனக்கு ஜென்ம பூமி. தெலுங்கானா எனக்கு கர்ம பூமி. ஆந்திரா எனக்கு ஆத்ம பூமி. என் தந்தை என்.டி.ஆரின் சினிமா பயணம் இங்குதான் வளர்ந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருடன் என்.டி.ஆர். பெரிய நட்பு கொண்டிருந்தார். தெலுங்கு மக்கள் போல, சென்னை மக்களும் என்.டி.ஆரை நேசித்தார்கள்.
தெய்வ சக்தி இல்லாமல் இதுபோன்ற படங்கள் வெளியாக முடியாது. இந்து தர்மம், சனாதன தர்மம் என்றால் என்ன? என்பதை வரும் தலைமுறையினரும் அறியவேண்டும். அதற்கான ஒரு நல்ல தளம் தான் சினிமா. நான் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. 50 ஆண்டுகளாக ஹீரோவாகவே நடிப்பது பெற்றோர், கடவுளின் ஆசிர்வாதம். நான் நடித்த 4 படங்களும் தொடர் ‘ஹிட்' அடித்துள்ளது. இதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்'” என்றார்.






