'கூலி' படத்தில் நான்தான் ஹீரோ..!- நாகார்ஜுனா சுவாரஸ்ய பேச்சு

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படத்தில் நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் நாகார்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நாகார்ஜுனா கூலி படத்தில் நான்தான் ஹீரோ என்று பேசியுள்ளார். அதாவது, "கூலி படத்திற்காக இயக்குனர் லோகேஷ் என்னை அணுகிய போது நீங்க வில்லனாக நடிக்குறீங்களா என்று கேட்டார். இல்லையென்றால் டீ குடிச்சிட்டு சினிமா பத்தி பேசலாம்னு சொன்னார். இப்படத்தில் என் கதாபாத்திரம் (வில்லன்) பெரிதாக பேசப்படும் என நம்புகிறேன். இந்த படத்தில் ஹீரோ நான்தான். லோகேஷ் நெகடிவ் ரோல் கொடுத்தாலும் இது எனக்கு பாசிடிவ் அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்" என்று சுவாரஸ்யமாக பேசினார்.