"ஹவுஸ் மேட்ஸ்" சினிமா விமர்சனம்

ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
இளம் தம்பதியான தர்ஷன் - அர்ஷா சாந்தினி பைஜூ அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறார்கள். நாட்கள் செல்ல செல்ல அந்த வீட்டில் சில அமானுஷ்ய சம்பவங்கள் அரங்கேறுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போகிறார்கள். இதையடுத்து வீட்டில் உள்ள சுவரில் 'நீங்கள் யார்?' என்று எழுத, அந்த வீட்டில் அவர்களுக்கே தெரியாமல் காளிவெங்கட் - வினோதினி தம்பதி தங்களது மகனுடன் வாழ்ந்து வருவது தெரியவருகிறது. ஒரு குடும்பம் வாழ்வதே, இன்னொரு குடும்பத்துக்கு தெரியாமல் இருக்கிறது. அதனைத்தொடர்ந்து இரு குடும்பத்தினரும் சுற்றி நடக்கும் சம்பவங்களை பகிர, பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இந்த விசித்திரமான சிக்கலில் இரு குடும்பத்தினரும் சிக்கிக்கொள்ள காரணம் என்ன? அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே பரபரப்பான மீதி கதை.
தர்ஷன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை கொடுத்து கவனம் ஈர்க்கிறார், அர்ஷா சாந்தினி பைஜூ. அனுபவ நடிப்பால் காளிவெங்கட் - வினோதினி அசத்தியுள்ளனர். தீனா, அப்துல் லீ, சிறுவன் ஹென்ரிக் என அனைவருமே கொடுத்த வேலையில் நிறைவு சேர்த்துள்ளனர்.
பெட்ரூம் சுவரில் குழந்தையின் கிறுக்கல்கள் என்று திகிலுடன் தொடங்கும் படம், பின்னர் 'இது அமானுஷ்யம் இல்லை அறிவியல்' என்பதை சொல்லும் இடத்தில் தடம் மாறி செல்கிறது.
ஒரே வீட்டை இரு கோணங்களில் காட்சிப்படுத்தியதில் எம்.எஸ்.சதீஷின் உழைப்பு தெரிகிறது. ராஜேஷ் முருகேசனின் இசையும், பின்னணி இசையும் படத்துக்கு துணை நிற்கிறது.
பொழுதுபோக்கு படைப்பில் அறிவியல் ஆச்சரியத்தை புகுத்தி, அதில் அதிர்ச்சிகரமான சம்பவங்களை சுவாரசியமாக சொல்லி சோதனை முயற்சியில் நம்மையும் அழைத்து சென்றுள்ளார். இயக்குனர் ராஜவேல். சொன்ன விளக்கம் புரிந்தாலும், ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.
ஹவுஸ் மேட்ஸ் - புரியாத புதிர்.